சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தும் ‘சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ-2024’ என்ற 2 நாள் வீட்டுவசதி கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், I ads & events நிறுவனமும் இணைந்து ஆதித்யாராம் குழுமத்தின் ஆதரவுடன் ‘சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ-2024’ என்ற வீட்டுவசதி கண்காட்சியை 2 நாட்கள் நடத்துகின்றன. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த கண்காட்சியை ஆதித்யாராம் குழுமத்தின் துணை பொது மேலாளர் (விற்பனை) ராஜா ரவீந்திரன் நேற்று ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.
இக்கண்காட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பிரபல தனியார் கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் என 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்முறையாக, துபாயில் வீடு, மனை, வணிக வளாகம், சேமிப்பு கிடங்குகள் போன்றவற்றை வாங்க விரும்புவோருக்காக துபாயை சேர்ந்த Foot Print Real Estate மற்றும் 101 Premium Properties ஆகிய முன்னணி நிறுவனங்களும் அரங்குகள் அமைத்துள்ளன. கண்காட்சியில் காலி மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், மூத்த குடிமக்களுக்கான கம்யூனிட்டி வீடுகள், ஹாலிடே ஹோம்ஸ் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் ஆதித்யாராம் குழுமத்தின் மூத்த மேலாளர் (விற்பனை) விமல்ராஜா, ஜி-ஸ்கொயர் உதவி மேலாளர் (ஜி-ஸ்கொயர் ரியல்டர்ஸ் – விளம்பர பிரிவு) ராம் கணேஷ், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் விளம்பர விற்பனை பிரிவு பொது மேலாளர் வி.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற ரியல் எஸ்டேட் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
ஆதித்யாராம் குழுமத்தின் மேலாளர் (விற்பனை) சையது ஹபிசுதீன்: சென்னையை தலைமையிடமாக கொண்ட ஆதித்யாராம் குழுமம் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலையில் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வீட்டு மனை, வில்லாக்களை விற்பனை செய்கிறோம். பனையூர், உத்தண்டி, அக்கரை, திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வில்லாக்களை உருவாக்கி ரூ.2.5 கோடி முதல் ரூ.7.5 கோடி வரை விற்கிறோம். கிழக்கு கடற்கரை சாலையில் 900 சதுரஅடி வீட்டு மனை ரூ.80 லட்சத்துக்கு (நிலத்துக்கான விலை மட்டும்) விற்கப்படுகிறது.
ஜி-ஸ்கொயர் குழுமத்தின் உதவி மேலாளர் ஜாக்சன் சாம்பால்: எங்கள் நிறுவனம் 2020-ல் இருந்து வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்துகிறது. அனைத்து தரப்பு மக்களுக்காக 1,490 சதுரஅடி முதல் 10,800 சதுரஅடி வரையிலான வீட்டு மனைகளை விற்பனை செய்கிறோம். இடம் வாங்கி, வீடு கட்டி, கிரஹப்பிரவேசம் வரை அனைத்து உதவிகளையும் செய்கிறோம். 2 ஆண்டுகள் வரை இலவச பராமரிப்பும் உண்டு.
துபாய் ஃபுட்பிரின்ட் ரியல் எஸ்டேட் மேலாளர் (வளம்) சன்வார் மீனா: சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளோம். முதன்முறையாக சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ கண்காட்சியில் பங்கேற்கிறோம். துபாயில் வீட்டு மனை, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்டவற்றை வாங்க விரும்புவோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம்.
துபாயை சேர்ந்த 101 பிரீமியம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் பவித்ரா பாஸ்கர்: துபாயைவிட இந்தியாவில் வீட்டு மனையின் ஆண்டு மதிப்பு, அடுக்குமாடி குடியிருப்பின் வாடகை பலமடங்கு அதிகம். தவிர, துபாயில் வீட்டு மனை, வணிக வளாகம், சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தால் வரி கிடையாது. ரூ.5 கோடி முதலீடு செய்தால் 3 பேருக்கு கோல்டன் விசாவும் துபாய் அரசு வழங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. அனுமதி இலவசம். 2 நாள் கண்காட்சி இன்று நிறைவடைகிறது. இன்று இரவு 8 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.