டபிள்யூபிஎல் மினி ஏலம்: ரூ.1.60 கோடிக்கு தமிழக வீராங்கனை கமலினி ஏலம்
பெங்களூரு: மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனை ஜி.கமலினி ரூ.1.60 கோடிக்கு எடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யு.பி. வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இந்த போட்டிக்கான மினி ஏலம் நேற்று பெங்களூரு நகரில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை ஜி. கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. ஸ்காட்லாந்து வீராங்கனை சாரா பிரைஸை ரூ.10 லட்சத்துக்கு டெல்லி அணியும், ஆருஷி கோயில், கிராந்தி கவுட் ஆகியோரை தலா ரூ.10 லட்சத்துக்கு யு.பி. வாரியர்ஸ் அணியும் வாங்கியுள்ளன.
இந்தியாவில் அடுத்த ஆண்டில் உலக தடகளப் போட்டி
புதுடெல்லி: அடுத்த உலக தடகள போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது என்று இந்திய தடகள சம்மேளனம் (ஏஎஃப்ஐ) அறிவித்துள்ளது. இதுகுறித்து ஏஎஃப்ஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்தப் போட்டியானது ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறும். உலகத் தடகளப் போட்டியாக இது இருந்தாலும் இந்தியாவில் நடைபெறும் பிரிவானது வெண்கலப் பதக்கங்களுக்கான போட்டியாக மட்டுமே இருக்கும். இந்தியாவில் உலகத் தடகளப் போட்டியானது 1980-களின் இறுதியிலும், 1990-களின் தொடக்கத்திலும் இதற்கு முன்பு நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தடகளப் போட்டியின் ஒரு பிரிவு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்துடன் 3-வது கிரிக்கெட் டெஸ்ட்: நியூஸிலாந்து 340 ரன்கள் முன்னிலை
ஹாமில்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 340 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஹாமில்டனில் நடைபெறும் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 347 ரன்கள் எடுத்தது. டாம் லேதம் 63, மிட்செல் சாண்ட்னர் 76 ரன்கள் குவித்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து 143 ரன்களுக்கு சுருண்டது. மேட் ஹென்றி 4, வில்லியம் ஓ ரூர்க்கி, மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்களைச் சாய்த்தனர். 204 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்ஸன் 50, ரச்சின் ரவீந்திரா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இதையடுத்து நியூஸிலாந்து 340 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.