பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் ஒரு தவறிழைத்துள்ளார். அதாவது டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்ததுதான் அந்தத் தவறு.
தொடர்ந்து டாசில் முடிவெடுக்க ரோஹித் சர்மா திணறுகிறார் என்றால் அவருக்கு பிட்ச் எப்படி என்பதைப் பற்றிய அனுபவத்தின் மீதான ஐயங்களை எழுப்புகிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியிலும் டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியாவை அழைத்து செம அடி வாங்கினார்.
அப்போது ஸ்டிவ் ஸ்மித் (121), ட்ராவிஸ் ஹெட் (163) சதங்களுடன் ஆஸ்திரேலியா 469 ரன்கள் விளாசினார். அப்போது பும்ராவும் இல்லை. மீண்டும் இந்தியா பேட் செய்யும் போது ரஹானே (89), ஜடேஜா (48), ஷர்துல் தாக்கூர் (51) என்று 296 ரன்களைத் தேற்றினர். 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை 167/6 என்ற நிலையிலிருந்து 270/8 டிக்ளேர் செய்ய இந்தியா 234 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி.
சமீபத்தில் பெங்களூரில் நியூஸிலாந்துக்கு எதிராக கிரீன் டாப் கடினமான பிட்சில் முதலில் பேட்டிங்கை தப்பும் தவறுமாக தேர்வு செய்து 46 ஆல் அவுட்டில் முடிந்து தொடரையும் 0-3 என்று வரலாற்று இழப்புக்குச் சொந்தக்கார கேப்டனாகத் திகழ்ந்தார்.
ஆஸ்திரேலிய தொடரில் பும்ரா கேப்டன்சியில் பெர்த்தில் கனக் கச்சிதமாக அவர் முதலில் பேட் செய்ய முடிவெடுத்து 150க்கு ஆல் அவுட் ஆனாலும் 2வது இன்னிங்சில் பெரிய ஸ்கோரை எடுத்து ஆஸ்திரேலியாவை பொட்டலம் கட்டியது இந்திய அணி. ஆனால் மீண்டும் ரோஹித் சர்மா வந்தார், அடிலெய்டில் டாஸ் வென்று தப்பும் தவறுமாக பேட்டிங் எடுத்தார். இப்போது பிரிஸ்பனிலும் பார்க்க கிரீன் டாப் பிட்ச் ஆகத் தெரிந்தாலும் அடியில் சாஃப்ட் ஆக இருப்பதால் பந்துகளில் பெர்த்தில் இருக்கும் அந்த zip இல்லை.
அடிலெய்டில் இருந்த பிங்க் பந்து ஸ்விங்கும் அவ்வளவாக இல்லை. பிட்ச் வழவழுப்பாக உள்ளது, ரஃப் ஆக இருந்தால்தான் பந்து மண்ணில் பிடித்து பிறகு வரும் அதில்தான் பேட்டர்கள் தவறிழைப்பார்கள். இந்த பிரிஸ்பன் பிட்சில் அந்த ரஃப்னெஸ், அதாவது சொறசொறப்பு இல்லை, எனவே பவுலர்கள் முயற்சி செய்து பந்தின் தையலில் அடித்து எழுப்பினால்தான் உண்டு. இதை ஆஸ்திரேலிய பவுலர்கள் செய்ய முடியும் அதனால்தான் அவர்கள் பவுலிங் செய்யும் போது பிட்ச் மாறிவிட்டதா என்ற தேவையற்ற ஐயம் நமக்கு எழுகிறது, காரணம் பிட்ச் அல்ல, அவர்கள் முயற்சி எடுத்து 140-145 கிமீ வேகம் வீசுகிறார்கள்.
பந்துகளை கலந்து கட்டி, ஃபுல் லெந்த், பேக் ஆஃப் அ லெந்த், ஷார்ட் பிட்ச் பவுன்சர், யார்க்கர்கள் என்று அச்சமூட்டுகின்றனர். நாம் அதைச் செய்ய முடியாமல் திணறுகிறோம். மழைக்கு முன்னான இந்திய பவுலிங்கும் ஆஸ்திரேலிய பேட்டிங் பெரிய ரன்களைக் குவிக்க அடித்தளம் அமைத்துத் தரும் போல்தான் இருக்கிறது.
இதே தவறை இங்கிலாந்து 2002 ஆஷஸ் தொடரில் பிரிஸ்பன் டெஸ்ட்டில் செய்தது. கேப்டன் நாசர் ஹுசைன் டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்து பெரும் தவறிழைத்தார். மேத்யூ ஹெய்டன் 197, ரிக்கி பாண்டிங் 123 , வார்ன் 57 என்று ஆஸ்திரேலியா 492 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட். மெக்ரா 4, கில்லஸ்பி 2, ஆண்டி பிகெல் 2.
இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் மேத்யூ ஹெய்டன் 103 ரன்களை விளாசி இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து சாதித்தார். மார்டின், கில்கிறிஸ்ட் அதிரடி அரைசதம் விளாச 296/5 என்று டிக்ளேர் செய்தார் ஸ்டீவ் வாஹ். 464 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இங்கிலாந்து படுமோசமாக 28.2 ஓவர்களில் 79 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி கண்டது. காரணம் என்ன டாஸில் எடுத்த தவறான முடிவு. ஆகவே டாஸ் முடிவு எடுக்கும் போது பிட்சை சரியாகக் கணிக்கும் திறமை வேண்டும், இது அவசியம் இதைச் செய்யத் தெரியாதவர் கேப்டனாக இருக்க லாயக்கற்றவரே.