புதுடெல்லி: ‘‘பாலியல் வன்கொடுமையாளர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் கொள்ளையர்களின் தலைநகரமாக டெல்லி மாறிவிட்டது’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடிதம் அனுப்பியுள்ளார்.
டெல்லியில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியும், பாஜக.,வும் தங்கள் பிரச்சாரங்களில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. இந்நிலையில் டெல்லியின் சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
டெல்லி சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பு வகிக்கும் நாட்டின் உள்துறை அமைச்சருக்கு வேதனையுடன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளேன். டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றம் அதிகரித்துள்ளது. எல்லா தெருக்களிலும் கொள்ளையர்கள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். போதை பொருள் கடத்தல் கும்பலின் புகலிடமாக டெல்லி மாறிவிட்டது. உங்களின் தலைமையின் கீழ் டெல்லி குற்றங்களின் தலைநகரமாக உள்ளது வெட்கக்கேடு.
கொலைகள் நடைபெறும் நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. பெண்களின் பாதுகாப்பு மிக மோசமாக உள்ள 19 பெருநகரங்களின் பட்டியலில் டெல்லி உள்ளது. கடந்த 6 மாதங்களில் 300 பள்ளி, கல்லூரிகள், 100 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் போதைப் பொருள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 350 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.