பிரிஸ்பன்: இந்தியா – ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து அடிலெய்டில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சனிக்கிழமை (டிச.14) பிரிஸ்பனில் உள்ள காபா மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நாதன் மெக்ஸ்வீனி – உஸ்மான் காவாஜா ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கி விளையாடினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது, மழை குறுக்கிட்டது. மழை நின்று விடும் எதிர்பார்த்த நிலையில், உணவு இடைவேளை விடப்பட்டது. அதன்பிறகும் தொடர்ந்து மழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி 13.2 ஓவர்கள் முடிவில் நாதன் மெக்ஸ்வீனி 4 ரன்களுடனும், உஸ்மான் காவாஜா 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா விக்கெட் இழப்புகளின்றி 28 ரன்களைச் சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.