மும்பை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் கட்டுப்பாட்டில் இருந்து விலகி நம்மை அதன் அடிமையாக்கும் என வரலாற்று துறை பேசாரியரும், எழுத்தாளருமான யுவால் நோவா ஹராரி தெரிவித்துள்ளார்.
‘நெக்சஸ்: கற்காலம் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான தகவல் பரிமாற்ற அமைப்பு முறைகளின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற அவரது லேட்டஸ்ட் புத்தகம் தகவல்கள் (Information) குறித்து பேசுகிறது. மும்பையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஏஐ குறித்து தனது பார்வையை யுவால் நோவா ஹராரி முன்வைத்தார்.
“ஏஐ நமது கட்டுப்பாட்டில் இருந்து நம்மை அதன் அடிமையாக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், ஏஐ என்பது கருவி அல்ல. அதுவொரு ஏஜென்ட். ஒரு புத்தகமோ அல்லது அச்சகமோ நம் கட்டுப்பாட்டில் இருந்து தப்பாது. அச்சகத்தால் புதிய புத்தகத்தை உருவாக்க முடியாது. ஆனால், ஏஐ அதை செய்யும். டெக்ஸ்ட், இமேஜ் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை ஏஐ உருவாக்கும் திறன் கொண்டுள்ளது.
சுயமாக கற்று, அதற்கான மாற்றத்துக்கு செல்லும் தன்மையை ஏஐ கொண்டுள்ளது. அதனால் தான் அதை கட்டுப்படுத்துவது கடினம் என சொல்கிறேன்.
2016-ல் கோ விளையாட்டின் உலக சாம்பியன் லீ செடோலை செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ‘ஆல்பா கோ’ வீழ்த்தியது. அதுவரை உலகம் கோ விளையாட்டை விளையாட பயன்படுத்திய யுக்திகளில் இருந்து ஆல்பா கோ முற்றிலும் வேறுபட்டது. அது வெறும் விளையாட்டு தான். இருந்தாலும் அதில் அது செய்த மாற்றத்தை நாம் கவனிக்க வேண்டும். அதனால் தான் அது குறித்த எச்சரிக்கையை தருகிறேன்.” என தெரிவித்துள்ளார்.