சென்னை: வேளாண் கல்வி, ஆராய்ச்சி விருதுக்கான பரிந்துரைகளை கல்லூரிகள் அனுப்ப வேண்டுமென யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமம்(ஐசிஏஆர்) என்பது நாட்டில் வேளாண் கல்வி, ஆராய்ச்சியை ஒருங்கிணைக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இது நாட்டில் வேளாண்மை, வேளாண் கல்வி, விரிவாக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ராஷ்ட்ரிய கிருஷி விஞ்ஞான் புரஸ்கார் (ஆர்கேவிபி) விருதை வழங்கி வருகிறது.
இந்த விருது வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் துறையில் புதுமை மற்றும் தொழில்நுட்பம்; வேளாண்மை மற்றும் அது சார்ந்த அறிவியல் துறையில் ஆராய்ச்சி; வேளாண்மை, வேளாண் கல்வி, விரிவாக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் ஆகியவற்றில் சிறந்த இடைநிலைக் குழு ஆராய்ச்சி, வேளாண் கல்வி, வேளாண் அறிவியல் துறைகளில் சிறந்த பெண் விஞ்ஞானி; வேளாண்மை மற்றும் அதுசார்ந்த அறிவியல் துறையில் சிறந்த இளம் விஞ்ஞானி ஆகிய 5 பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் இந்த விருதுக்கான பரிந்துரைகளை https://awards.gov.in/ என்ற வலைத்தளத்தில் ஜனவரி 1 முதல் மார்ச் 31-ம் தேதி வரையான நாட்களுக்குள் பதிவு செய்யலாம். பல்கலை.கள், கல்லூரிகள் இந்த விருது தொடர்பான தகவல்களை தங்களது கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.