ஹைதராபாத்: தெலங்கானாவில் ‘புஷ்பா 2’ திரைப்படம் பார்க்க சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் அப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிக்கட்டப்பல்லி காவல் நிலையத்துக்கு அவரை போலீஸார் அழைத்து சென்றுள்ளதாகவும் தகவல்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. இந்தப் படம் ரூ.1,000 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு தெலங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. அதன்படி 4-ம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி (39) என்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார்.
இந்நிலையில், அல்லு அர்ஜுனை தற்போது இந்த வழக்கு தொடர்பாக தெலங்கானா போலீஸார் காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளதாக தகவல். முன்னதாக, 12-ம் தேதி அன்று நெரிசலில் சிக்கி ரசிகை உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.