ஹைதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீமியர் காட்சியின்போது படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நாம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அதற்கு முந்தைய நாள் இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி (39) என்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்தார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் இன்று (டிசம்பர் 13) அல்லு அர்ஜுனை காவல் துறையினர் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து விசாரணைக்காக அவர் சிக்கடப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அவர் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து சஞ்சல்குடா மத்திய சிறையில் அல்லு அர்ஜுன் அடைக்கப்படுகிறார்.