புதுடெல்லி: ஏடிஎம் மையத்தில் பிஎஃப் பணத்தை எடுக்கும் திட்டம் அடுத்த ஆண்டு ஜூனில் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎஃப்ஓ) 7.37 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் நலனுக்காக ‘இபிஎஃப்ஓ 3.0’ என்ற புதிய வரைவு கொள்கை வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த வரைவு கொள்கை அடுத்த ஆண்டு ஜூனில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதுகுறித்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூத்த அதிகாரிகள் கூறும்போது, “பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறை மிகவும் கடினமாக இருப்பதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதை எளிமைப்படுத்த வங்கிகளை போன்று ஏடிஎம் மையங்களில் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு ஏடிஎம் அட்டை வழங்கப்படும்.
பணம் தேவைப்படும் பிஎஃப் சந்தாதாரர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட பிறகு ஏடிஎம் மையங்களில் எளிதாக பணம் எடுத்து கொள்ளலாம். எவ்வளவு பணம் எடுக்கலாம் என்பதற்கு வரம்பு நிர்ணயிக்கப்படும்.
தற்போது தொழிலாளர் பங்களிப்பு 12 சதவீதமாக உள்ளது. புதிய வரைவு கொள்கையில் இந்த வரம்பு நீக்கப்பட உள்ளது. சிலர் 10 சதவீத தொகையை செலுத்த விரும்பலாம். வேறு சிலர் 15 சதவீத தொகையை செலுத்த விரும்பலாம். புதிய கொள்கையின்படி தொழிலாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சதவீதத்தை நிர்ணயித்து கொள்ளலாம்.
எனினும், நிறுவனங்களின் பங்களிப்பு தொகையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது. இபிஎஃப்ஓ 3.0 வரைவு கொள்கைக்கு ஏற்ப தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் இணையதளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர். | இபிஎஃப்ஓ 3.0 திட்டம் குறித்த விரிவான பார்வைக்கு > தொழிலாளர் வைப்பு நிதி 3.0: புதிய முடிவுகளே நம்மை உயர்த்திப் பிடிக்கும்!