உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்றிருக்கிறார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்து தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதற்கு முன்பு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் தனது 22 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. அதை இப்போது தனது 18 வயதில் முறியடித்துள்ளார் நம் சென்னை செஸ் கில்லி குகேஷ். அதேபோல், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார்.
சிங்கப்பூரில் நடந்து முடிந்த உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று டி.குகேஷ் சாதனை படைத்த அந்தத் தருணம் நெகிழ்ச்சியானது. வெற்றிக்கான நகர்த்தலை முடித்ததும் குகேஷின் கண்களில் கண்ணீர் வடிந்தது. நொடிப்பொழுதில் அவர், போர்டு முன் தலை சாய்ந்தார். இதன் பின்னர் போட்டி நடைபெற்ற அறையில் இருந்து வெளியே வந்த அவர், அங்கு காத்திருந்த தனது தந்தையை ஆரத்தழுவினார்.
சாம்பியன் பட்டம் வென்ற பின்னர் டி.குகேஷ் கூறும்போது, “நான் ஆறு, ஏழு வயதிலிருந்தே உலக சாம்பியன் பட்டத்தை பற்றி கனவு கண்டு வந்தேன். இந்த தருணத்துக்காகவே வாழ்ந்தேன். ஒவ்வொரு செஸ் வீரரும் இந்த தருணத்தை அடையவே விரும்புகிறார்கள். அதில் நான் இருப்பதன் மூலம் எனது கனவு மெய்ப்பட்டுள்ளது. நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். கேண்டிடேட்ஸ் தொடர் முதல் இங்கு வரை எனது முழு பயணமும் வெற்றியாக அமைந்தது. இது கடவுளின் அருளால் மட்டுமே சாத்தியமாகும்” என்று உணர்ச்சிப் பொங்க பேசினார்.
இந்த பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்ட குகேஷ், “பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு உலக சாம்பியன் பட்டம் இந்தியாவிடமிருந்து பறிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அந்த கண்ணாடி கூண்டுக்குள், ஒரு நாள் நானும் இருப்பது மிகவும் அருமையாக இருக்கும் என்று நினைத்தேன்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பே சாம்பியன் பட்டத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கனவு எனக்குள் இருந்தது. தற்போது பட்டத்தை வென்றுள்ளேன். இதை விட சிறந்தது எதுவுமில்லை” என்று உத்வேகமும் உற்சாகமும் நிறைந்து பேசினார்.
செஸ் உலகில் குகேஷ் சிகரங்களை அடைவதற்கு அவரது பெற்றோர் செய்த தியாகங்களும் நினைவுகூரப்பட வேண்டியது அவசியம். குகேஷின் தந்தை ரஜினிகாந்த் காது, மூக்கு, தொண்டை நிபுணர், தாய் பத்மா நுண்ணுயிரியலாளர்.
2017-18ம் ஆண்டு குகேஷ், கிராண்ட் மாஸ்டர் நார்ம் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் இருந்ததால் உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் பங்கேற்க வேண்டி இருந்தது. இதனால் ரஜினிகாந்த் தனது பணியை நிறுத்திவிட்டு மகனுடன் பயணிக்க தொடங்கினார். இதனால் வீட்டுச் செலவுகளை அவரது தாய் பத்மா கவனிக்க வேண்டிய நிலை உருவானது. பல நாட்கள் இவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ள முடியாத நிலை கூட இருந்துள்ளது.
இவர்களது தியாகங்களின் பலனாக குகேஷ் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அப்போது அவருக்கு பனிரெண்டு வயது. இதன் மூலம் அவர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். மேலும் குகேஷின் பயணத்துக்காக சேமித்து வைத்திருந்த மொத்த தொகையையும் அவரது பெற்றோர் செலவழிக்க நேர்ந்தது.
மேற்கொண்டு நிதி தேவைப்பட்ட நிலையில் விஸ்வநாதன் ஆனந்த் அகாடமி வழியாக அதற்கான உதவியும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து குகேஷின் பயணம் ஏறுமுகமானது. தற்போது உலக சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்று விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு நாட்டுக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் கனடாவின் டொராண்டோ நகரில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த குகேஷ், ‘இந்து தமிழ் திசை’க்கு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில், தனக்கு சிறு வயதில் செஸ் ஆர்வம் எப்படி வந்தது, தனக்காக பெற்றோர் பட்ட கஷ்டங்கள் குறித்து பகிர்ந்திருந்தார்.
அந்தப் பேட்டியில் சொல்லியிருப்பார்… “எனது செஸ் வாழ்க்கையில் கேண்டிடேட்ஸ் தொடரில் பட்டம் வென்றது மிகப் பெரிய நிலை. இத்துடன் இந்த பயணம் முடிவடையவில்லை. உலக சாம்பியன் பட்டத்தை வென்றாலும் இந்தப் பயணம் முடிவடையப் போவது இல்லை. உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தாண்டியும் அதிக தூரம் பயணிக்க வேண்டி உள்ளது” என்றார் குகேஷ்.
ஆம், தமிழகத்தின் அடையாளமாகவும், இந்தியாவின் பெருமிதமாகவும் குகேஷின் வெற்றிப் பயணம் தொடரும் என்பது நிச்சயம்!