புதுடெல்லி: இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க வரும் 15-ம் தேதி இந்தியா வர உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக பேசிய ரந்திர் ஜெய்ஸ்வால், “இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக அநுர குமார திசாநாயக்க இந்தியா வருகை தர உள்ளார். அரசு முறைப் பயணமாக வரும் 15 முதல் 17-ம் தேதி வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ள அவர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். டெல்லியில் நடைபெற உள்ள தொழில்துறை நிகழ்ச்சியிலும் இலங்கை அதிபர் பங்கேற்க இருக்கிறார். மேலும் புத்த கயாவுக்கும் செல்ல உள்ளார்” என தெரிவித்தார்.
அநுர குமார திசாநாயக்கவின் இந்திய பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு வெளி விவகாரத் துறை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, “வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அநுர குமார திசாநாயக்க இந்தியா செல்லவுள்ளார். ஒரு நாடாக, இலங்கைக்கு மிகவும் வலுவான வெளிநாட்டு உறவுகள் தேவை, மேலும் மிகவும் வலுவான ராஜதந்திர சேவையும் இருக்க வேண்டும். இந்த பயணத்திற்குப் பின் இலங்கைக்கு பல சாதகமான செய்திகள் கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபராக அநுர குமார திசாநாயக்க பதவியேற்றதை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் அவரை சந்தித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.