நடிகர் ரஜினிகாந்த் தனது 74-வது பிறந்தநாளை, ஜெய்ப்பூரில் நடக்கும் கூலி படப்பிடிப்பில் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு முதல்வர், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
‘கூலி’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கு படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி தனது 74-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி வழக்கம்போல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு ரசிகர்கள் பலர் வருகை தந்து வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் லதா ரஜினிகாந்தின் அறிவுறுத்தலின்பேரில், இல்லத்துக்கு வருகை தந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதற்கிடையே, ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், திரையுலகத்தினர் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபதுவரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால், ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் அவர், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: நடிப்புத்திறமையால் உலகமெங்கும் வாழும் திரை ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்த நடிகர் ரஜினிகாந்துக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ரஜினிகாந்தின் கலையுலகப் பயணம் இன்றுபோல் என்றும் நம் எல்லோரையும் மகிழ்விக்கட்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: திரையுலக வாழ்வில் பொன்விழா கொண்டாட உள்ள நடிகர் ரஜினிகாந்த், இன்னும் பல்லாண்டு பூரண உடல் நலத்துடன் ரசிகர்களை மென்மேலும் மகிழ்விக்க வாழ்த்துகிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: 50 ஆண்டுகளுக்கு மேலாக 3 தலைமுறைகளை தனது வசீகரத்தால் கட்டிப் போட்டு, இந்திய திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இனிய நண்பரும், பத்மவிபூஷண், தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல விருதுகளுக்கு சொந்தக்காரரும், மிகச்சிறந்த ஆன்மீகவாதியுமான நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: அன்பு நண்பர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள், பெற்று நலம் சூழ, மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
தவெக தலைவர் விஜய்: பேரன்பிற்கும், மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: நடிகர் ரஜினிகாந்துக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல்நலத்துடன் நூற்றாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீடுடி வாழ இறைவனை வேண்டுகிறேன்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: எவரையும் கவர்ந்திழுக்கும் நடிகர். இந்தியத் திரையுலகை தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்த திரை ஆளுமை. திரை வானில் மிளிரும் உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இவர்களுடன் முன்னாள் எம்பி சு.திருநாவுக்கரசர், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், லோகேஷ், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், இசையமைப்பாளர்கள் அனிருத், டி.இமான் உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.