பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு தலைமறைவான மெகுல் சோக்சியின் ரூ.2,500 கோடி சொத்துகள் ஏலம் விடப்பட உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ.13,500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி மெகுல் சோக்சி, அவரது உறவினர் நீரவ் மோடி உள்ளிட்டோர் மீது மீது புகார் எழுந்தது. இதையடுத்து, மெகுல் சோக்சி தலைமறைவானார். மெகுல் சோக்சி உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அவருக்கு சொந்தமான ரூ.2,565 கோடி மதிப்பிலான பல்வேறு சொத்துகள் முடக்கப்பட்டன.
இதனிடையே, மெகுல் சோக்சி 2018-ம் ஆண்டில் ஆன்டிகுவா நாட்டில் தஞ்சமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைளில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், முடக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் ரூ.2,500 கோடி மதிப்பிலான சொத்துகளை ஏலம் விட மும்பையில் உள்ள சிறப்பு பிஎம்எல்ஏ நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதன்படி, மும்பையின் சான்டாகுரூஸ் பகுதியில் அமைந்துள்ள கேடி டவர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 6 வீடுகள், எல்க்ட்ரானிக் எக்போர்ட் பிராசசிங் ஜோன் பகுதியில் உள்ள 2 தொழிற்சாலைகள் உள்ளிட்டவை ஏலத்துக்கு வர உள்ளன.
ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் தொகை, பாதிக்கப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.