புதுடெல்லி: தமிழ் மொழியின் பொக்கிஷமாக பாரதியார் நூல்கள் அமைந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதியாரின் படைப்புகள் அடங்கிய 23 பாகங்களை பிரதமர் வெளியிட்டார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேசியக் கவி பாரதியாரின் முழுமையான படைப்பு நூல்களின் தொகுப்பை 23 பாகங்களாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் அமைந்துள்ள சாகித்ய அகாடமி சார்பில் பிரதமரின் அரசு இல்லத்தில் இதற்கான நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கால வரிசையில் பாரதி படைப்புகள் என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்ட இந்நூல்களை சீனி விசுவ நாதன் தொகுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவாத், நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த தொகுப்பில் சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணி தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கக் காட்சி போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. முதன்முறையாக பாரதியார் படைப்புகள் காலவரிசைப்படி நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தின் 123 ஆண்டுகள் பழமையான அலையன்ஸ் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மகா கவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை நாடு இன்று கொண்டாடுகிறது. நான் அவரை பயபக்தியுடன் வணங்குகிறேன். அவரது மரபுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறேன்.
மகாகவி சுப்ரமணிய பாரதியின் படைப்புகள் வெளிவருவது என்பது அவருக்கு குறிப்பிடத்தக்க மரியாதையை அளிப்பதாகும். நாட்டின் தேவைகளை மனதில் கொண்டு பாடுபட்ட சிறந்த சிந்தனையாளர் சுப்ரமணிய பாரதி. அவருடைய பார்வை மிகவும் விசாலமானது. அந்த காலகட்டத்தில் நாட்டுக்குத் தேவையான அனைத்து திசைகளிலும் அவர் பணியாற்றினார்.
மகா கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளை வெளியிடுவதில் நான் பெருமை கொள்கிறேன். பாரதியார் தமிழகத்தின், தமிழ் மொழியின் பாரம்பரியம் மட்டுமல்ல, அவர் தனது ஒவ்வொரு மூச்சையும் அன்னை பாரதத்தின் சேவைக்காக அர்ப்பணித்த சிந்தனையாளர்.
நம் நாட்டில், வார்த்தைகள் வெறும் வெளிப்பாடாக மட்டும் இல்லாமல், ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. வார்த்தைகளின் எல்லையற்ற ஆற்றலைப் பொக்கிஷமாகக் கருதும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் நாம். அதனால்தான் நம் ஞானிகளின் வார்த்தைகள் அவர்களின் எண்ணங்கள் மட்டுமல்ல, அவர்களின் சிந்தனை, அனுபவம் மற்றும் ஆன்மீக பயிற்சியின் சாறாக அமைந்துள்ளன.
சுப்ரமணிய பாரதி போன்ற ஆளுமை நூற்றாண்டுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடியது. அவருடைய சிந்தனை, புத்திசாலித்தனம், பல பரிமாண ஆளுமை ஆகியவை நம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. அவரது எண்ணங்கள், சிந்தனைகள் நம் எல்லோரையும் ஊக்குவிக்கிறது. அவரை நோக்கி ஈர்க்கின்றன. தமிழ் மொழியின் பொக்கிஷமாக தேசியக் கவிஞர் பாரதியாரின் நூல்கள் அமைந்துள்ளன. பாரதியாரின் படைப்புகள் இன்றும் கூட நம்மை ஊக்குவிக்கின்றன.
காசி என்று அழைக்கப்படும் வாராணசிக்கும், பாரதிக்கும் அதிக தொடர்புண்டு. தனது அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக வாராணசிக்கு பாரதியார் வந்தார். பின்னர் காசியிலேயே சில காலம் பாரதி தங்கியிருந்தார். காசிக்குப் பெருமை சேர்த்தவர் பாரதி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
நாடு முழுவதும் கொண்டாட்டம்: உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள வாராணசியில் காசி தமிழ் சங்கமம் கடந்த 2022-ம் ஆண்டில் முதன்முறையாக நடந்தது. அப்போது, பாரதியின் பிறந்தநாளை மத்திய கல்வித் துறை அமைச்சகம் இனி வருடந்தோறும் ‘தேசிய மொழிகள் தினம்’ ஆக கொண்டாடப்படும் என்று அறிவித்தது. இதன் காரணமாக, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆண்டு பாரதியாரின் பிறந்தநாள் இரண்டாவது முறையாக கொண்டாடப்பட்டது.