சென்னை: “நாங்கள் ஒன்றும் பரம எதிரிகள் கிடையாது. எப்போதுமே நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எங்கே, எப்படி எல்லாம் மாறியது என்று தெரியவில்லை. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. அவருக்கென்று சில காரணங்கள் இருக்கலாம். அதைப் போல எனக்கும் சில காரணங்கள் இருந்தது” என்று தனுஷ் உடனான பிரச்சினை குறித்து நடிகை நயன்தாரா மனம் திறந்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நயன்தாரா பேசியதாவது: “எனக்கு சரியென்று நினைக்கும் ஒரு விஷயத்தை செய்ய நான் ஏன் பயப்பட வேண்டும்? நான் தவறாக எதையாவது செய்தால்தானே பயப்பட வேண்டும்? பப்ளிசிட்டிக்காக ஒருவரது இமேஜை அழிக்கும் ஆள் நான் அல்ல. படத்தின் விளம்பரத்துக்காகவும் நான் அப்படி செய்யவில்லை. அது என்னுடைய நோக்கமே கிடையாது. அவரது நண்பர்கள், மேனேஜர் ஆகியோருக்கு ஏராளமான முறை தொலைபேசியில் அழைத்தோம். ஆனால் அவை எதுவும் பலனளிக்கவில்லை. ‘நானும் ரவுடிதான்’ படத்தில் விக்னேஷ் எழுதிய நான்கு வரிகளை மட்டுமே நாங்கள் பயன்படுத்த விரும்பினோம். அது எங்களுக்கு மிகவும் பெர்சனலான ஒன்றாக இருந்தது. அது இந்த ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என்று நாங்கள் மிகவும் விரும்பினோம்.
அதற்காக நாங்கள் நிறைய முயற்சிகளை மேற்கொண்டோம். அந்த 4 வரிகளும் எங்கள் வாழ்க்கையுடன் தொடர்புடையது. தனுஷ்தான் அவற்றுக்கு முதலில் ஓகே சொன்னவர். நாங்கள் அப்போது நல்ல நண்பர்களாக இருந்தோம். நாங்கள் ஒன்றும் பரம எதிரிகள் கிடையாது. எப்போதுமே நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் எங்கே, எப்படி எல்லாம் மாறியது என்று தெரியவில்லை. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. அவருக்கென்று சில காரணங்கள் இருக்கலாம். அதைப் போல எனக்கும் சில காரணங்கள் இருந்தது.
நான் அவருடைய மேனேஜரிடம் பேசினேன். பொதுவாக நான் அப்படி பேசுவதில்லை. நீங்கள் எனக்கு அந்த நான்கு வரிகளுக்கான அனுமதி தரவில்லை என்றாலும் பரவாயில்லை. அது அவரது உரிமை. ஆனால் என்னோடு போனில் பேச மட்டும் சொல்லுங்கள். அதன் மூலம் என்ன பிரச்சினை, எங்கள் மீது என்ன கோபம் என்று புரிந்து கொள்ளலாம் என்று கூறினேன். அவரை சுற்றி உள்ளவர்கள் ஏதேனும் சொல்கிறார்களா? அப்படி ஏதாவது இருந்தால் அதை பேசி சரிசெய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அவர் ஒரு புகழ்பெற்ற நடிகர், நிறைய பேரால் நேசிக்கப்படுபவர். அதே அன்பும் மரியாதையும் நாங்களும் அவர் மீது வைத்திருக்கிறோம். ஆனால் இப்படி ஒரு பிரச்சினை வரும்போது நான் முன்வந்து பேச வேண்டியிருந்தது” இவ்வாறு நயன்தாரா தெரிவித்தார்.