புதுடெல்லி: ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை காலை 11 மணிக்குக் கூடியதை அடுத்து சோனியா காந்தி – ஜார்ஜ் சோரஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று ஆளும் தரப்பு எம்பிக்களும், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டன.
அமளிக்கு இடையே பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீஸ் அளித்ததற்காக எதிர்க்கட்சிகளைக் கண்டித்துப் பேசினார்.
அப்போது அவர், “அவைத் தலைவரை மதிக்கத் தெரியாத உங்களுக்கு (எதிர்க்கட்சிகளுக்கு) எந்த உரிமையும் கிடையாது. அரசியலமைப்புச் சட்டத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
ஆனால், நீங்கள் நாட்டுக்கு எதிரானவர்களோடு நிற்கிறீர்கள். நமது மாநிலங்களவைத் தலைவரைப் போன்ற ஒருவரை கண்டுபிடிப்பது கடினம். அவர் எப்போதும் ஏழைகளின் நலன் குறித்தும் அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் பேசுகிறார். நாடகம் நடத்துவதற்காக கொடுக்கப்பட்ட நோட்டீஸ் வெற்றி பெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் ஜார்ஜ் சோரஸ்-க்கும் என்ன சம்பந்தம்? அது வெளிப்படுத்தப்பட வேண்டும். காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” எனப் பேசினார்.
இதையடுத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தீவிர அமளியில் ஈடுபட்டதை அடுத்து முதலில் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியதும் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார். அப்போதும் இரு தரப்பு எம்பிக்களும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா, “சோனியா காந்தி – ஜார்ஜ் சோரஸ் தொடர்பு குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஏனெனில், இது நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை பற்றியது. இந்த விவாதத்தில் இருந்து திசை திருப்புவதற்காகவே காங்கிரஸ் கட்சி வேறு பிரச்சினைகளை எழுப்புகிறது. மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. இது மாநிலங்களவைத் தலைவரை அவமதிக்கும் செயல். இதை அனைவரும் கண்டிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
நட்டாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக ஹரிவன்ஷ் அறிவித்தார்.