முதல்வர் ஆராய்ச்சி ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள் 69 பேருக்கு ஊக்கத் தொகைக்கான ஆணைகளையும் 2 பேருக்கு பாரதி இளங்கவிஞர் விருதுகளையும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையையும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.
தமிழக முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவும், பாரதி இளங்கவிஞர் விருது வழங்கும் விழாவும் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொண்டு 25 மாணவர்களுக்கு ஊக்கத் தொகை ஆணைகளையும், 44 பேருக்கு ஊக்கத் தொகை பெறுவதற்கான செயல்முறை ஆணைகளையும் வழங்கினார். மேலும் மாணவி ஏ.விக்னேஸ்வரி, மாணவர் மதிராஜா ஆகியோருக்கு பாரதி இளங்கவிஞர் விருதுகளையும், தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையையும் அமைச்சர் வழங்கினார். முன்னதாக அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது:
மாணவர்கள் கல்வி பயில சமூக சூழலோ, பொருளாதாரமோ,அரசியல் சூழலோ எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் தமிழக முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை. கல்விக்கும், சுகாதாரத்துக்கும் முதல்வர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தமிழக மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்துவதும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கவிப்பதுமே முதல்வர் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தின் தலையாய நோக்கம்.
இத்திட்டத்தின் பயனாளிகள் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். முதல்வரின் அறிவுரையின் பேரில் பயனாளிகளின் எண்ணிக்கை 120-லிருந்து 180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் மட்டுமல்லாமல் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் பயிலும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆராய்ச்சி பணியை தொடர் அவர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்வரின் ஆலோசனையை பெற்று, மாணவர் தேர்வில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
துணை முதல்வரின் வழிகாட்டுதலின் படி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த வசதியாக போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, மாணவர்கள் இத்தைய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை செயலர் கே.கோபால், கல்லூரி கல்வி ஆணையர் எ.சுந்தரவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.