பாயல் கபாடியா இயக்கிய திரைப்படம் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. மும்பையில் வசிக்கும் 2 கேரள செவிலியர்கள் பற்றிய கதையை கொண்ட இந்தப் படத்தில் கனி குஸ்ருதி, சாயா கதம், திவ்ய பிரபா, ஹிருது ஹாரூண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் கேன்ஸ் பட விழாவில், பாம் டி ஓர் விருதுக்குப் போட்டியிட்டது. இந்தியா சார்பில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விருதுக்குப் போட்டியிட்ட முதல் திரைப்படம் இது. ஆனால், அந்த விழாவின் 2-வது உயரிய ‘கிராண்ட் பிரி’ விருதை வென்றது. இதன் மூலம் ‘கிராண்ட் பிரி’ வென்ற முதல் இந்திய இயக்குநராகி வரலாறு படைத்தார் பாயல் கபாடியா.
இந்நிலையில், 82-வது கோல்டன் குளோப் விருதுக்கு இந்தப் படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இந்த விழா அடுத்த ஆண்டு ஜன. 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் உருவான சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் இருந்து கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இயக்குநர் என்ற பெருமையை பாயல் கபாடியா பெற்றுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்த பரிந்துரையால் பெருமைப்படுகிறேன். இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் இது ஒரு கொண்டாட்டம். இந்தப் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது, அதைப் பார்த்து ஆதரவளியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.