ஹைதராபாத்: நடிகர் மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மனோஜ் மன்சுவுக்கு இடையிலான சொத்து பிரச்சினை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை மோகன் பாபு விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவுக்கு, விஷ்ணு மன்சு, மனோஜ் மன்சு என்ற 2 மகன்களும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். இவர்களும் சினிமாவில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் சொத்து பிரச்சினை காரணமாக மனோஜ் தன்னைத் தாக்கியதாக ஹைதராபாத் பஹாடி ஷெரிஃப் போலீஸில் மோகன்பாபு நேற்று (டிச.09) புகார் அளித்தார். பவுன்சர்களுடன் தனது வீட்டில் மனோஜ் அத்துமீறி நுழைய முயல்வதாகவும் மோகன் பாபு அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்திருந்த மனோஜ் மன்சு, தனது தந்தையின் இந்த புகார் அதிர்ச்சி அளிப்பதாக கூறி நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார். இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை மனோஜ் மன்சு உள்ளிட்ட சிலர் ஜல்பல்லியில் உள்ள மோகன் பாபுவின் வீட்டுக்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள் குவிந்தனர்.
வெளியாட்களை அப்புறப்படுத்துவதற்காக அங்கு போலீசாரும் தனியார் பாதுகாவலர்களும் வந்தனர். அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த மோகன் பாபுவிடம் பத்திரிகையாளர்கள் சிலர் மைக்கை நீட்டியபோது கடும் கோபமடைந்த அவர், மைக்கை பிடுங்கி பத்திரிகையாளர்களை ஓட ஓட விரட்டி அடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மோகன் பாபுவின் இந்த செயலுக்கு தெலங்கானா பத்திரிகையாளர்கள் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.