மார்கழி மாதம் பிறப்பதை முன்னிட்டு வரும் 17-ம் தேதி அதிகாலை முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவைக்கு பதில் ஒருமாதம் வரை ஆண்டாள் அருளிய திருப்பாவை சேவை நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் அதிகாலை சுப்ரபாத சேவை நிகழ்ச்சியுடன் சுவாமிக்கு சேவைகள் தொடங்கும். ஆனால், மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்திற்கு பதில், ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாடி, ஏழுமலையானை துயில் எழுப்புவது ஐதீகம். இந்த திருப்பாவை சேவை இந்த ஆண்டு வரும் மார்கழி மாதம் 17-ம்தேதி அதிகாலை முதல் தொடங்கும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மார்கழி மாதம் 16-ம்தேதி காலை 6.57 மணிக்கு பிறப்பதால், அதற்குள் சுப்ரபாதம் பாடப்படும். மறுநாள் 17-ம் தேதி முதல் திருப்பாவை சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆழ்வார்களில் பெண் ஆழ்வாராக போற்றி புகழப்படும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் மார்கழி மாதம் முழுவதும் வரும் ஜனவரி 14-ம் தேதி வரை பாடப்படும்.
மேலும், இந்த மார்கழி மாதத்தில் மட்டும் இரவு நடக்கும் ஏகாந்த சேவையில் போக ஸ்ரீனிவாச மூர்த்திக்கு பதில் ஸ்ரீ கிருஷ்ணரே இடம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.