இந்தூர்: மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்ற பாடகர் தில்ஜித்தின் இசை நிகழ்ச்சிக்கு எதிராக பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் நடத்திய நிலையில், “இந்தியா யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல” என தில்ஜித் தோசன்ஜ் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபி மற்றும் இந்தியில் பாடி புகழ்பெற்றவர் பாடகர் தில்ஜித் தோசன்ஜ். இவரது இசை நிகழ்ச்சி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. 2020-ம் ஆண்டு மறைந்த இந்தூரைச் சேர்ந்த பிரபல உருது கவிஞர் ரஹத் இந்தோரிக்கு இந்த கச்சேரியை அர்பணிப்பதாக தில்ஜித் அறிவித்திருந்தார்.
தில்ஜித் தேச விரோத செயல்களில் ஈடுப்பட்டு வருபவர், மேலும் அவரது இசைக் கச்சேரியில் இறைச்சி மற்றும் மது உள்ளிட்டவை விற்கப்படுகின்றன என கூறி, இசை நிகழ்சிக்கு தடைவிதிக்க வேண்டும் எனபஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தினர். காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர். ஆனாலும் இசை நிகழ்ச்சி இந்தூரில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பாடிய தில்ஜித் தோசன்ஜ், உருது கவிஞர் இந்தோரியின் பிரபலமான கஜல் வரிகளான, “அவர்கள் எதிர்த்தால் எதிர்க்கட்டும் விட்டுவிடுங்கள். இது வெறும் புகை தான், வானமோ மிகப்பெரியது. இந்த நிலம் அனைவரின் தியாகத்திலும் உருவானது. இந்தியா யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல” என வரிகளை மேற்கொளிட்டு பாடலை பாடினார். இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, “விவசாயிகள் போராட்டத்தில் தேசத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுப்பட்டவர் தில்ஜித். அவர் காலிஸ்தான் ஆதரவாளர். அவரது இசை நிகழ்ச்சி இங்கு நடைபெறுவதை அனுமதிக்கமாட்டோம்” என தெரிவித்திருந்தனர்.