தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் நடிப்பில் உருவாகி உள்ள ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார், இந்தப் படத்தை இயக்கி உள்ளார். விக்ரமுடன் இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் படம் உருவாகி உள்ளது. மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இரண்டு பாகமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வெளியீடாக வெள்ளித்திரையில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், 1.47 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்தப் படத்தின் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் மளிகை கடை நடத்தி வரும் விக்ரம், பெண் குழந்தையை பாசமுடன் கவனித்துக் கொள்வது போல முதல் காட்சி வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து துஷாரா விஜயனுடன் விக்ரம் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் கடக்கின்றன. தொடர்ந்து கதையின் பல்வேறு பாத்திரங்கள் அறிமுகம் ஆகிறது. பின்னர் விக்ரம் ஆக்ஷனில் ஈடுபடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. >>டீசர் வீடியோ