அகமதாபாத்: வரும் 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இலக்கை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றும் தன்னார்வலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் (பிஏபிஎஸ்) சன்ஸ்தா (ஆன்மிக அமைப்பு) சார்பில் கார்யகர் சுவர்ன மஹோத்சவ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது:
இந்திய கலாச்சாரத்தில் சேவை என்பது மிகப்பெரிய தர்மமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சேவை என்பது மிகப்பெரிய மதம். பொது சேவை என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கு சமமானது. இந்த சேவையை திட்டமிட்டு செய்தால் அர்புதமான பலன் கிடைக்கும். இதன்மூலம் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். நாட்டில் உள்ள பல்வேறு தீய சக்திகளை ஒழிக்க முடியும்.
அந்த வகையில், பிஏபிஎஸ் தன்னார்வலர்கள் தங்கள் தன்னலமற்ற சேவையின் மூலம் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானோர் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, அங்கு வசித்த இந்திய மாணவர்களை பத்திரமாக தாயகம் மீட்டு வர இந்த அமைப்பினர் உதவி செய்தார்கள். இவர்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனர். இது மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. தன்னலமற்ற சேவை வழங்கி வரும் அனைவருக்கும் வாழ்த்துகள்.
லட்சக்கணக்கானவர்கள் ஒரு பொதுவான நோக்கத்துக்காக இணையும்போது, அது நாடு மற்றும் சமுதாயத்தின் மிகப்பெரிய சக்தியாக மாறும். அந்த வகையில், வரும் 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்க அடுத்த 20 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. இந்த இலக்கை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. ஏதாவது பெரிதாகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் மக்கள் ஒன்றிணைகிறார்கள். அது ஒவ்வொரு துறையிலும் காணப்படுகிறது. இதற்காக பிஏபிஎஸ் தன்னார்வலர்களும் ஒரு தீர்மானத்தை எடுத்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லட்சக்கணக்கான பிஏபிஎஸ் தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்டோர் 50 ஆண்டுகளாக தன்னலமற்ற மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் சமூக மற்றும் ஆன்மிக சேவை செய்து வருவதை பாராட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.