மலையாள நடிகையான ஹனி ரோஸ் தமிழில், ‘முதல் கனவே’, ‘சிங்கம்புலி’, ‘கந்தர்வன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் அவர், இப்போது ‘ரேச்சல்’ என்ற மலையாளப் படத்தில்நடித்துள்ளார். இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழியிலும் வெளியாக இருக்கிறது. இவர் மலையாள நடிகர் சங்கத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: என் அழகு பற்றியும் திருமணம் பற்றியும் கேட்கிறார்கள். நான் நல்ல எண்ணத்துடன் இருக்கிறேன். அழகு என்பது நல்ல மனதின் வெளிப்பாடு. எனக்கு காதலர் ஒருவர் இருந்தார். இப்போது இல்லை. சரியான நபர் கிடைக்கும் போது எனது திருமணம் நடக்கும். சரியான நபர் என்றால் எனக்குப் பொருத்தமானவர். ஒருவரைத் தெரிந்து கொண்டு அவரிடம் சிறிது நேரம் பேசினால் உள்ளுக்குள் ஒரு நடுக்கத்தை உணர வேண்டும். அப்படி இதுவரை ஏற்படவில்லை. அந்த சரியான நபர் இன்னும் என் எல்லைக்குள் வரவில்லை. அவரை என் குடும்பத்தினர் பார்த்தாலும் நல்லதுதான்.
அதிகமான கடை திறப்பு விழாக்களில் என்னைப் பார்ப்பதாகச் சொல்கிறார்கள். அதிகம் இல்லை, குறைவாகவே கலந்து கொள்கிறேன். கேரளாவில் அனைத்து விதமான கடைகளும் திரை பிரபலங்களை அழைத்துதான் திறக்கப்படுகின்றன. தெலுங்கு பேசும் மாநிலங்களில் நகை மற்றும் ஜவுளி கடைகள் மட்டுமே அப்படித் திறக்கப்படுகின்றன. உணவகங்கள் உள்ளிட்ட மற்ற கடை திறப்புக்கு அரிதாகவே அழைக்கப்படுகிறார்கள். பெட்ரோல் பங்க் திறப்பதற்குக் கூட அழைப்பு வந்தது. அதற்கெல்லாம் நடிகைகளை ஏன் அழைக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. சமூக ஊடகங்களில் வரும் எதிர்மறையான கருத்துகள் என்னை காயப்படுத்துவதில்லை. அதுபற்றி நினைத்துக் கொண்டே இருந்தால் நிம்மதி போய்விடும். அதனால் அதைக் கண்டுகொள்வதில்லை. இவ்வாறு ஹனி ரோஸ் தெரிவித்துள்ளார்.