Last Updated : 09 Dec, 2024 10:19 AM
Published : 09 Dec 2024 10:19 AM
Last Updated : 09 Dec 2024 10:19 AM
சென்னை: ஊரகத் திறனாய்வுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று (டிச. 9) வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் (சென்னை தவிர) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான ஊரகத் திறனாய்வு தேர்வு டிசம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு நவ. 12-ம் தேதி தொடங்கி 25-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் மற்றும் ஹால்டிக்கெட்கள் www.dge.tn.gov.in எனும் வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதேபோல், ஹால்டிக்கெட்டில் தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தையும் தெளிவாக கூற வேண்டும்.
ஹால்டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பமிட வேண்டும். இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
FOLLOW US
தவறவிடாதீர்!