நியூயார்க்: கடந்த வாரம் அமெரிக்க நாட்டின் யுனைடெட் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்ப்ஸன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சூழலில் ஆப்பிள், மெட்டா, கூகுள் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களது சிஇஓ-க்களின் பாதுகாப்புக்காக செலவிடும் தொகை குறித்து பார்ப்போம்.
எஸ்&பி 500 நிறுவனங்கள் பாதுகாப்பு சார்ந்து செலவிடும் விகிதம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக தரவு சார்ந்த விவரங்கள் வெளியிடும் ஈக்விலர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு 2021 மற்றும் 2023 ஆண்டுகளை அந்நிறுவனம் ஒப்பிட்டுள்ளது. இதேபோல முன்னணி நிறுவனங்களின் முக்கிய தலைமை நிர்வாகிகள் பாதுகாப்பு சார்ந்து செலவிடும் விகிதம் இதே காலகட்டத்தில் சுமார் 23.5 முதல் 27.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதாரணமாக எஸ்&பி 500 நிறுவனங்களில் அதிகபட்சமாக மெட்டா நிறுவன சிஇஓ மார்க் ஸூகர்பெர்கின் பாதுகாப்பு சார்ந்து சுமார் 24.4 மில்லியன் டாலர்கள் செலவிடப்படுகிறது. அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப நபர்களின் பாதுகாப்பு சார்ந்து சுமார் 9.4 மில்லியன் டாலர்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு சார்ந்த செலவாக 14 மில்லியனும் செலவிடுகிறது மெட்டா. இது அவரது இல்லம் மற்றும் பயண நேர பாதுகாப்பையும் உள்ளடக்கிய தொகை. இதேபோல மெட்டா நிறுவனம் 9 லட்சம் டாலர்களை சிஓஓ ஜேவியரின் பாதுகாப்புக்கு செலவிடுகிறது.
இந்தப் பட்டியலில் மெட்டாவுக்கு அடுத்த இடத்தில் கூகுள் நிறுவனம் உள்ளது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்காக 6.8 மில்லியன் டாலர்களை செலவிடுகிறது. மூன்றாவது இடத்தில் அமேசான் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் நிறுவனத் தலைவர் ஜெஃப் பிசோஸ் உள்ளிட்ட அமேசான் நிறுவன தலைமை பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கு 2.7 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. என்விடியா சிஇஓ ஜென்சென் ஹுவாங் பாதுகாப்புக்கு 2.5 மில்லியன் டாலர்கள், எலான் மஸ்க் பாதுகாப்புக்காக 2.4 மில்லியன் டாலர்கள், ஆப்பிள் சிஇஓ டிம் குக்கின் பாதுகாப்புக்காக கடந்த ஆண்டு 8.2 லட்சம் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.