புதுடெல்லி: இந்தியாவில் 66 சதவீத வணிக நிறுவனங்கள், அரசின் சேவைகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவது லோக்கல்சர்க்கிள்ஸ் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. சிசிடிவி கேமரா உள்ளிட்ட கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் ஊழல் நடவடிக்கை கட்டுப்படுத்தப்படவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நாடு தழுவிய அளவில் 159 மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 66 சதவீத வணிகங்கள் லஞ்சம் கொடுத்த பிறகே அரசின் சேவைகளை பெற முடிவதாக கவலை தெரிவித்துள்ளன.
வணிக நிறுவனங்கள் கடந்த 12 மாதங்களி்ல பல்வேறு வகையான அரசு நிறுவனங்களுக்கு சப்ளையர்களாக தகுதி பெறவும், ஆர்டர்களை தக்கவைக்கவும், நிறைவேற்றிய பணிகளுக்கான பேமண்ட்களை பெறவும் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளன.
மொத்த லஞ்சத்தில் 75 சதவீதம் சட்டம், அளவியல், உணவு, மருந்து, சுகாதாரம் போன்ற அரசு துறைகளின் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பலர், ஜிஎஸ்டி அதிகாரிகள், மாசுகட்டுப்பாட்டு துறை, மாநகராட்சி மற்றும் மின் துறைக்கு அதிக அளவில் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.
18,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 54 சதவீதம் பேர் தாங்கள் லஞ்சம் கொடுக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், 46 சதவீதம் பேர் அரசின் செயல்பாடுகளை வேகப்படுத்த தானாக முன்வந்து லஞ்சம் அளித்ததாகவும் கூறியுள்ளனர். வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே பணம் கொடுக்காமல் தங்களுக்கு அரசின் சேவைகள் கிடைத்தாக தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் மயமாக்குவது, சிசிடிவி கேமராக்களின் பயன்பாட்டை அதிகரிப்பது ஆகியவை அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழலை தடுக்கவில்லை. சிசிடிவிக்கு அப்பால் மூடிய கதவுகளுக்குப் பின்னால் லஞ்சத்தை அரசு அதிகாரிகள் பெற்றுக் கொள்வதாக வணிக நிறுவனர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு லோக்கல்சர்க்கிள்ஸ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.