2024 ஆஸ்கர் விருதுக்கு இந்தியால் இருந்து ‘லாபத்தா லேடீஸ்’ இந்தி திரைப்படம் அதிகாரபூர்வ என்ட்ரியாக நுழைந்துள்ளது. அந்த ரேஸுக்கான பட்டியலில் இடம்பெற்ற வகையில், ‘ஆஸ்கர்’ லெவலுக்கு உரிய தமிழ்ப் படங்கள் குறித்த ஒரு விரைவுப் பார்வை இது…
கொட்டுக்காளி: ‘சாதி’ய ஆணவக் கொலைகளுக்கு எதிராகவும், பிற்போக்குத்தனங்கள், மூட நம்பிக்கை, ஆணாதிக்கத்தை கேள்வி எழுப்பிய தமிழின் முக்கியமான படைப்பு ‘கொட்டுக்காளி’. பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்திய இந்தப் படம், அதன் முழுமையற்ற க்ளைமாக்ஸ் காரணமாக விவாதத்தை கிளப்பியது. பின்னணி இசை இல்லையென்றாலும், நிகழ்விட ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி எந்த ஒரு காட்சியிலும் தடுமாற்றம் இன்றி பார்வையாளர்களுக்கு புது அனுபவம் கொடுத்த படைப்பு.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: மலைவாழ் பழங்குடியினரின் வாழ்வதாரா அழிப்பு, நில அபகரிப்பு, அதிகார அத்துமீறல் என ‘கமர்ஷியல்’ களத்தில் கன்டென்ட் சார்ந்த அழுத்தமான படைப்பாக வரவேற்பை பெற்றது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் நடிப்பால் கதைக்களத்தை மெருக்கேற்றினர். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், க்ளைமாக்ஸும் படத்தின் ஆன்மா.
மகாராஜா: சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை ‘நான் லீனியர்’ திரைக்கதை மூலம் சொல்லியிருந்தார் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன். தந்தைக்கு உரிய நிதானத்துடன் விஜய் சேதுபதி, மகளாக சாச்சனா, பாலியல் கொடுமைக்கான ‘உடனடி’ நீதியை வழங்கும் நட்டி, அப்பாவி வில்லனாக சிங்கம் புலி அசத்தியிருந்தார்கள். இந்த திரைக்கதை அமைப்பு தமிழ் சினிமாவில் அரிது என்பதுடன் படத்தின் ‘எங்கேஜிங்’ தன்மை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
வாழை: தன்னை பாதித்த நிகழ்வுகளையும், ‘வாழை’ தொழிலாளிகளின் வலிகளையும், ‘வெகுஜன’ ரசனைக்கு உட்படுத்தி மாரி செல்வராஜ் இயக்கிய படம் இது. பசியின் கோரத்தை வெளிப்படுத்தியது. ரீமிக்ஸ் பாடல்கள் திரையரங்கில் வரவேற்பை பெற்றன. சிறுவர்களான பொன்வேல், ராகுல் அறிமுக படத்துக்கான தடயமே இல்லாமல் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். சலிப்பை ஏற்படுத்தாமல் காட்சிகளை நகர்த்தியது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
தங்கலான்: ‘மேஜிக்கல் ரியாலிசம்’ மூலம் புதிய திரை அனுபவத்தை பா.ரஞ்சித் பார்வையாளர்களுக்கு கொடுக்க முனைந்த திரைப்படம். நுணுக்கமாக ஆராய அத்தனை விஷயங்கள் இருந்தன. கேஜிஎஃப் பகுதியில் உழைக்கும் மக்களை சுரண்டும் ஆங்கிலேயர்களையும், நில ஜமீன்தார்களையும் தோலுரித்தது. விக்ரம், பார்வதி, மாளவிகா கூட்டணி அசத்தல் நடிப்பும், ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும்தரம்.
ஜமா: கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலை பேசும் அழுத்தமான படைப்பை அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கியுள்ளார். இளையராஜாவின் இசை படத்துக்கு பலம். எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் கதைக்களத்துக்கு நேர்மையான படம் இன்னும் பேசபட்டிருக்க வேண்டியது. ஆனால், வெகுஜன சினிமா பார்வையாளர்களிடையே போதிய ‘புகழ்’ வெளிச்சம் பெறவில்லை. இருப்பினும் ஓடிடியில் வரவேற்பு பெற்றது.