மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 3 நாட்கள் சிறப்பு கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பதவியேற்காமல் வெளிநடப்பு செய்தனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றியது.
கடந்த 5-ம் தேதி பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது. பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் துணை முதல்வர்களாகவும் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர சட்டப்பேரவையின் 3 நாட்கள் சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது.
முதல் நாளில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். அவையின் தற்காலிக சபாநாயகர் காளிதாஸ் கொலம்பகர் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏக்கள் பதவியேற்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து சிவசேனா சட்டப்பேரவைத் தலைவர் ஆதித்ய தாக்கரே கூறும்போது, “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுகிறது. எனவே எம்எல்ஏக்களின் பதவியேற்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்” என்று தெரிவித்தார்.
குளிர்கால கூட்டத் தொடரில்: துணை முதல்வர் அஜித் பவார் கூறும்போது, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது சந்தேகம் எழுந்தால் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம். இவர்கள் வெளிநடப்பு செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை. எம்எல்ஏக்களாக பதவியேற்றால் மட்டுமே நாக்பூரில் தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்க முடியும்” என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. முன்னாள் சபாநாயகர் ராகுல் நர்வேகர், பாஜக மூத்த தலைவர் சுதிர் முன்கன்திவார் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரும் 16-ம் தேதி நாக்பூரில் உள்ள மகாராஷ்டிர சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அப்போது புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று ஆளும் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.