சென்னை: சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நிறுவனத்தின் 80-வது ஆண்டு விழா சென்னையில் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள விமானப் போக்குவரத்தை கட்டுப்படுத்தி அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல் பணிகளை மேற்கொள்ள சர்வதேச சிவில் விமான போக்குவரத்து நிறுவனத்தை (International Civil Aviation Organization-ICAO) ஜநா சபை 1944-ம் ஆண்டு உருவாக்கியது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளான டிசம்பர் 7-ம் தேதியானது, 1996 முதல் ‘சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினமாக (International Civil Aviation Day) ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் ஐசிஏஓ அமைப்பின் 80-வது ஆண்டு விழா மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் சென்னை விமான நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவை விண்வெளி, வானவியல் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனம் (Institute of Aeronautics Astronautics and Aviation-IAAA) நடத்தியது. இதன் இணை பங்குதாரர்களாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டிஎன் நிறுவனமும் செயல்பட்டன.
நிகழ்ச்சியில் சென்னை விமான நிலையத்தின் இயக்குநர் சி.வி.தீபக் பேசும்போது, “ஐசிஏஒ அமைப்புதான் உலகம் முழுவதும் உள்ள விமானப் போக்குவரத்தை வழிநடத்தி வருகிறது. அதன் 80-ம் ஆண்டு விழா ‘பாதுகாப்பான வான்வெளி; நிலையான எதிர்காலம்’ எனும் தலைப்பில் சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. ஏரோநாட்டிக்ஸ் துறைக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. எனவே, இளைஞர்கள் ஆர்வத்துடன் இந்த துறையை நோக்கிவர வேண்டும்” என்றார்.
ஐஏஏஏ அமைப்பின் தலைவர் சி.யு.ஹரி பேசும்போது, “விமானப் போக்குவரத்து துறை வரும் காலங்களில் தற்போதைய நிலையைவிட அதிக வளர்ச்சி அடைய உள்ளது. எனவே, இந்த துறையில் இருக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் துறையின் இணை இயக்குநர் இ.பாஸ்கரன், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகள், அரசின் நலத்திட்டங்கள், வங்கி கடனுதவி உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விரிவாக விளக்கம் அளித்தார்.
ஐஏஏஏ அமைப்பின் பொதுச்செயலாளர் சி.எஸ்.கருணாகரன் பேசுகையில், “வெளிநாடுகளின் நேரடி முதலீட்டில் தமிழகம் இன்னும் வளர்ச்சி பெற வேண்டும். தற்போது நமது பங்களிப்பு 5 சதவீதம் தான் உள்ளது. இவற்றை அதிகரிக்க வான்வெளித்துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை முறைப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக இந்த தினத்தில் வளர்ந்துவரும் சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டுள்ளன|” என்று தெரிவித்தார்.
விழா இறுதியில் வான்வெளி ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் பிரிவில் சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம், ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, பாரத் நிகர்நிலை பல்கலைக்கழகம், ரெமோ கல்லூரி ஆகியவற்றுக்கு விருதுகள் தரப்பட்டன. அதேபோல் சிறந்த இன்குபேட்டர் ஸ்டார்ட் அப் பிரிவில் சவீதா நிகர்நிலை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதுதவிர சிறந்த ஸ்டார்ட் அப் பிரிவில் ஏவிரானிக்ஸ், யாழி, புல்லினம் ஆகிய நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட்டன.
முன்னதாக சர்வதேச விமானப் போக்குவரத்து தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அடுத்தகட்ட நிகழ்ச்சி தஞ்சாவூரில் டிசம்பர் 11-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.