மாஸ்கோ: அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கான உத்தரவினை வழங்கிவிட்டு சிரிய அதிபர் நாட்டைவிட்டு வெளியேறினார் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறுதையில், “அதிபர் பஷார் ஆசாத் மற்றும் சிரிய அரபு குடியரசு பிராந்தியத்தில் மோதலில் ஈடுபட்டுவந்த குழுக்களுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, தனது அதிபர் பதவியை துறந்து விட்டு நாட்டை விட்டு வெளியேறும் முடிவினை எடுத்தார், அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை மற்றுவதற்கான உத்தரவினை வழங்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ரஷ்யா பங்கேற்கவில்லை, சிரியாவில் உள்ள ரஷ்ய துருப்புகளும் ரஷ்ய ராணுவ தளங்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்றாலும் உடனடியாக அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இவ்வாறு ரஷ்யா தெரிவித்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சிப் படைகள் விரைவான தாக்குதல் மூலம் தலைநகர் டாமஸ்கஸை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதால், அங்கு ஐந்து தசாப்தங்கள் நடந்து வந்த ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
சிரிய கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் தளபதி கோலானி ஞாயிற்றுக்கிழமை அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி வாசித்த அறிக்கையில், “எதிர்காலம் நம்முடையது, இனி பின்வாங்குவதற்கு இடமேதும் இல்லை. கடந்த 2011-ல் நாம் தொடங்கிய பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்” என்று தெரிவித்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை அதிபர் பஷார் அல் ஆசாத் தலைநகரை விட்டு விமானத்தில் அடையாளம் தெரியாத இடத்துக்கு தப்பியோடிய நிலையில், கிளர்ச்சிப்படை, டாமஸ்கஸ் விடுதலை பெற்று விட்டதாக அறிவித்தது. மேலும் எங்களின் நகரம் விடுதலை பெற்றுவிட்டது என்றும், கொடுங்கோலன் ஆசாத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்து விட்டதாகவும் நாங்கள் அறிவிக்கிறோம் என்று அறிவித்தது.
தலைநகர் டாமஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் வசமானதைத் தொடர்ந்து கிளர்ச்சிப் படையினரும் பொதுமக்களில் சிலரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிரிய அதிபர் ஆசாத் நாட்டைவிட்டு வெளியேற பயன்படுத்திய விமானம் சுட்டு விழ்த்தப்பட்டிருக்கலாம் அல்லது இயந்திர கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற ஊகங்கள் வேகமாக பரவி வருகின்றன.
வாசிக்க > விபத்துக்குள்ளானதா சிரிய அதிபர் சென்ற விமானம்? – பஷார் அல் ஆசாத் குறித்து பரவும் ஊகங்கள்!