சென்னை: கிராமப் புறங்களில் அரசின் இணைய சேவை வழங்கும் திட்டத்துக்கு, உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தொழில்முனைவோர் விண்ணப்பிக்க அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இணைய பரவலில் தமிழகம், இந்தியாவிலே முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக கரோனா காலத்துக்கு பிறகு கிராமப் புறங்களில் வசித்து வரும் குடும்பங்கள் பலரும் செல்போன் மூலம் இணையத்தை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் நகர்ப்புற, கிராமப்புறங்களுக்கு இடையேயான டிஜிட்டல் சேவைக்கான இடைவெளியை குறைக்க, அனைவருக்கும் இணைய சேவையை வழங்குவதே ஜனநாயகமாகும்.
இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் தடையற்ற இணைப்பை உறுதி செய்வதற்காக, தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளையும் கண்ணாடி இழை வலையமைப்பு (ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க்) மூலம் இணைக்கும் ‘பாரத் நெட்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 ஜூன் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டம் அதிவேக அலைவரிசையை அடிப்படையாக கொண்டு, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்மூலம் கிராமப்புறங்களுக்கு விநாடிக்கு 1 ஜிபி வேகத்தில் விரைவான இணைய சேவை வழங்க முடியும். இத்திட்டத்தின் முதல்கட்டமாக 960 கிராம பஞ்சாயத்துகளில் தொழில்முனைவோர், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அல்லது இணைய சேவைகளில் அனுபவம் உள்ளவர்கள் TANFINET நிறுவனத்தின் உரிமம் பெற்று, ஒவ்வொரு வீட்டுக்கும் இணைய சேவையை அளிக்கும் தொழில் பங்கீட்டாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
அதற்கேற்ப தொழில் பங்கீட்டாளர்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://tanfinet.tn.gov.in என்ற வலைதளத்தில் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.