புதுடெல்லி: வங்கதேச நாட்டில் அமைந்துள்ள இஸ்கான் மையம் தீவைத்து எரிக்கப்பட்டது. கோயிலில் இருந்த கடவுள் சிலைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி, பதவி விலகியதில் இருந்து அங்குள்ள இந்துக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து வங்கதேச சனாதானி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த சின்மோய் கிருஷ்ண தாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 25-ம் தேதி டாக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஆதரவாக செயல்பட்ட ராமன் ராய் என்ற வழக்கறிஞர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தாவில் உள்ள இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாரமன் தாஸ் தெரிவித்திருந்தார். சின்மோய் கிருஷ்ண தாசுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருக்கும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வங்கதேச அரசிடம் இஸ்கான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் இஸ்கான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராதாரமன் தாஸ் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவின் நம்ஹட்டா பகுதியில் இஸ்கான் மையம் அமைந்துள்ளது. இந்த மையம் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் இருந்த கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த ஸ்ரீ ஸ்ரீ லஷ்மி நாராயண் உள்ளிட்ட கடவுள் சிலைகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த தீவைப்பில் கோயில் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது.
சனிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் 3 மணிக்குள் இந்த கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர்.
டாக்கா மாவட்டம் துராக் போலீஸ் சரகத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. கோயிலின் கூரை மீது பெட்ரோல் அல்லது ஆக்டேனை ஊற்றி மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர்.
இதுதொடர்பாக வங்கதேசத்தில் உள்ள அரசிடம் இஸ்கான் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸாரும், அரசு அதிகாரிகளும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.