சென்னை: ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகள் படிப்பது, பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவை படித்தாலும், விரும்பிய பட்டப் படிப்பில் சேருவது என்பது உட்பட பல்வேறு புதிய நடைமுறைகள் அடங்கிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.
இளங்கலை, முதுகலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்ற வேண்டிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஜூலை/ஆகஸ்ட் மற்றும் ஜனவரி/பிப்ரவரி என ஆண்டுக்கு 2 முறை உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை நடத்தலாம். உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்தந்த படிப்புகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்கல்வி நிறுவனமே முடிவு செய்யலாம்.
உயர்கல்வி, தொழிற்கல்வி, பயிற்சி, திறன் மேம்பாடு, இன்டர்ன்ஷிப் ஆகிய அனைத்தையும் ஒட்டுமொத்த பாடத் திட்டத்துடன் இணைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்தவும், விரும்பினால் தொடரவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இளங்கலை பட்டப்படிப்பு அல்லது ஒருங்கிணைந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2-வில் அறிவியல், கணிதம், வணிகவியல் என எந்த பாடப் பிரிவை தேர்வு செய்திருந்தாலும், விரும்பிய இளங்கலை பட்டப் படிப்பில் சேரலாம்.
இதற்காக, தேசிய அல்லது பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். உயர்கல்வி நிறுவனங்களில் போதிய கல்வி, அடிப்படை வசதி இருந்தால், இளங்கலை, முதுகலை படிப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களை நேரடியாக 2-ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
இளங்கலையில் ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளையும் முதுகலையில் 2 படிப்புகளையும் படிக்கலாம். மாணவர்களின் குறைந்தபட்ச வருகை பதிவு தேவையை தன்னாட்சி அமைப்புகளின் ஒப்புதலுடன் உயர்கல்வி நிறுவனங்கள் முடிவு செய்யலாம். இளங்கலை பட்டப் படிப்பின் காலம் 3 அல்லது 4 ஆண்டுகளாகவும், முதுகலை படிப்பின் காலம் 1 அல்லது 2 ஆண்டுகளாக இருக்கும். 4 ஆண்டு கால இளங்கலை படிப்பை முடிப்பவர்கள் ஓராண்டு முதுகலை படிப்பில் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட அனைத்து அம்சங்களும் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ளன. தமிழகத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படவில்லை. மாநில நடைமுறைப்படி, உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு ஒருமுறை, அதாவது ஜுன் மாதம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், இளங்கலை படிப்பின் காலம் 3 ஆண்டுகள் மட்டுமே. அதேபோல,பிளஸ் 2-வில் படிக்கும் பாடப்பிரிவுக்கு ஏற்பவே, பட்டப் படிப்பை தேர்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.