கட்டுமானப் பொருட்களைத் தரமானவையாகத் தேர்ந்தெடுத்துவிட்டால் போதும், வீட்டுக் கட்டுமானப் பணிகள் பாதி முடிந்த மாதிரிதான். அதனால் கலப்படமில்லாக் கட்டுமானப் பொருட்களை வாங்குவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் கலப்படம் வந்துவிட்ட இந்தக் காலத்தில் மண்ணிலும் கல்லிலும்கூடக் கலப்படம் வந்துவிட்டது. அதில் சிமென்டும் விதிவிலக்கல்ல.
கட்டுமான உறுதியில் கட்டுமானப் பொருட்களின் தரம் முக்கியமானது. அதிலும் கட்டுமானத்தைத் தாங்கிப் பிடிக்கும் சிமென்ட் தரமில்லாமல் இருந்துவிட்டால் கட்டுமானம் வெகுநாட்கள் வரை இருக்காது. சிமென்டும் மணலும் ஜல்லியும் கம்பியும் சேர்ந்துதான் வீடு என்னும் கட்டுமானத்தைப் பிடித்துவைக்கின்றன.
இந்தக் கலவையில் சிமென்டின் பணி முக்கியமானது. அதுதான் இந்தக் கலவையைப் பிடித்துவைக்கிறது. அப்படிப்பட்ட இந்த சிமென்டின் தரம் கட்டுமானத்துக்கு அவசியமான ஒன்று. அந்த சிமென்டைத் தரம் பார்த்து வாங்குவது அவசியம்.
சிமென்டைப் பொறுத்தவரையில் பல வகை உண்டு. 33 கிரேடு, 43 கிரேடு, 53 கிரேடு. இவற்றுள் 53 கிரேடு சிமென்ட் கான்கிரீட் பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. 43 கிரேடு சிமென்ட் கட்டுமானக் கல் வேலைகளுக்கும் 33 கிரேடு பூச்சுக்கும் பயன்படுத்தப்பட ஏற்றவை எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தரத்தைப் பொறியாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.
சிமென்ட் மூட்டையை வாங்கியதும். அதில் தரச் சான்று இருக்கிறதா, நிறுவனத்தின் பெயர் ஒழுங்காக எழுதப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
அடுத்ததாக, சிமென்ட் தயாரிக்கப்பட்ட தேதியைப் பார்க்க வேண்டும். சிமென்டின் தரம் நாள் ஆக ஆகக் குறைந்துகொண்டே வரும். தயாரிப்புத் தேதி இரு மாதங்களுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்கள் இருந்தால் அதன் தரம் 20 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. அதுபோல 6 மாதம் என்றால் 40 சதவீதம் தரம் குறைய வாய்ப்புள்ளது. சிமென்டின் நிறம் ஒரே மாதிரி இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.
சிமென்டின் நிறம் பொதுவாகச் சாம்பல் நிறத்தை ஒத்திருக்கும். சிமென்டில் கட்டிகள் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். ஒரே மாதிரி மாவுப் பொடி போல் இருக்க வேண்டும். கட்டிகள் இருந்தால் அவை ஈரத்தை உறிஞ்சி சிமென்டின் தரத்தைக் குறைக்கும்.
சிமென்டை விரல்களால் எடுத்துப் பார்க்க வேண்டும். அவை மிருதுவாக இல்லாமல் மணலைப் போல் சொரசொரப்பாக இருந்தால் அதில் கலப்படம் உள்ளது எனப் பொருள். சிமென்ட் மூடைக்குள் கை நுழைத்துப் பார்க்க வேண்டும். அப்போது குளிர்ச்சியை உணர்ந்தால் அது நல்ல சிமென்ட். இந்த முறைகளில் சிமென்டைச் சோதித்துப் பார்த்து வாங்குவது நல்லது. – முகேஷ்