அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் 128 ரன்களை சேர்த்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் வெள்ளிக்கிழமை (டிச.6) தொடங்கியது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதையடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 337 ரன்களை குவித்தது.
157 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்திய அணி. பாட் கம்மின்ஸ் வீசிய 4வது ஓவரில் 7 ரன்களுக்கு அவுட்டானார் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல். அவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த விராட் கோலி 11 ரன்களில் அவுட்டானார். ஷுப்மன் கில் 28 ரன்களில் போல்டு. 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 100 ரன்களை சேர்த்தது.
அடுத்து ரோகித் சர்மா 6 ரன்களில் போல்டாக ஆட்டம் ஆஸ்திரேலியா கைக்கு சென்றது. 24 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 128 ரன்களை சேர்த்த நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ரிஷப் பந்து 28 ரன்களுடனும், நிதிஷ்குமார் ரெட்டி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா 29 ரன்கள் ஆஸ்திரேலியாவை விட பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.