அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 180 ரன்களைச் சேர்த்தது. இதில் ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் சதம் அடித்து அசத்திய நிலையில் பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா 8 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவருக்கு உறுதுணையாக முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா செயல்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று (டிச.6) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே எல்பிடபள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். கடந்த முறை மிரட்டியவர் இந்த முறை முதல் பந்தில் டக் அவுட்டானது ஆஸி.,க்கு லாபம். அடுத்து ஷுப்மன் கில் – கே.எல்.ராகுல் இணை ஓரளவுக்கு தாக்குபிடித்து ஆடியது.
19-வது ஓவர் வீசிய மிட்செல் ஸ்டார்க் பந்தில் 37 ரன்களுடன் கே.எல்.ராகுல் பெவிலியன் திரும்பினார். அடுத்து களத்துக்கு வந்த விராட்கோலியையும் 7 ரன்களில் வெளியேற்றினார் மிட்செல் ஸ்டார்க். அடுத்து ஷுப்மன் கில் 31 ரன்களில் எல்பிடபள்யூ அவுட். ரோகித் சர்மாவும் 3 ரன்களில் எல்பிடபள்யூ.
ரிஷப் பந்து 21 ரன்கள், அஸ்வின் 22 ரன்கள், ஹர்ஷித் ராணா டக்அவுட்டாக 40 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 146 ரன்களைச் சேர்த்தது. பும்ரா டக்அவுட்டாக, மறுபுறம் நிதிஷ் ரெட்டி 42 ரன்களைச் சேர்த்து விக்கெட்டாக 44.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 180 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார் 6 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலான்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.