1983 உலகக்கோப்பையை வென்ற கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், கடும் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட வினோத் காம்ப்ளிக்கு நிதியளவில் உதவ முன்வந்துள்ளனர். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையையும் விதித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, பிரவீண் ஆம்ரே ஆகியோரது கிரிக்கெட் குருநாதர் ராமகண்ட் அச்ரேக்கரின் நினைவு தின நிகழ்ச்சி ஒன்றிற்கு வினோத் காம்ப்ளி வந்திருந்தார். அங்கு அவரது உடல் மிக மிக பாதிக்கப்பட்ட நிலையில் தன் பால்யகால கிரிக்கெட் சகா சச்சின் டெண்டுல்கரை அணைத்து கண்ணீர் விட்ட வீடியோ வைரலானது.
ஏற்கெனவே காம்ப்ளியின் சொந்த வாழ்க்கையின் கட்டுக்கோப்பின்மை, ஆல்கஹாலிக் பாதிப்பு குறித்து எழுதப்பட்டு விட்டன. இவரது இந்தப் பழக்கம் இவரை நண்பர்களிடமிருந்து அந்நியப்பட வைத்தது. ஆனால் இப்போது 1983 உலகக்கோப்பை வெற்றி நாயகர்கள் வினோத் காம்ப்ளிக்கு நிதியளவில் உதவ முன் வந்துள்ளனர். இப்போதைக்கு அவர் பிசிசிஐ அளிக்கும் ரூ.30,000 ஓய்வூதியத்தை மட்டும்தான் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் ஒரு நிபந்தனையுடன் உதவ முன்வந்துள்ளதாக முன்னாள் வீரர் பல்வீந்தர் சிங் சாந்து தெரிவித்துள்ளார், “கபில்தேவ் என்னிடம் தெளிவாக ஒன்றைச் சொன்னார். மறுவாழ்வு சிகிச்சைக்கு வினோத் காம்ப்ளி தயார் என்றால் நிதிரீதியாக நாம் உதவுவோம். அவர் முதலில் மறு வாழ்வு சிகிச்சைக்கு அவர் தன்னை ஒப்படைக்க வேண்டும். என்ன செலவாகிறதோ அதைக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், சிகிச்சை எத்தனை நாட்களுக்கு நீடித்தாலும் கவலையில்லை” என்று கூறியதாக ஆங்கில ஊடகச் செய்தி ஒன்று கூறியுள்ளது.
1983 உலகக்கோப்பை வெற்றி நாயகர்கள் ஏற்கெனவே கேன்சரால் பாதிக்கப்பட்ட அன்ஷுமன் கெய்க்வாடிற்கு உதவியுள்ளனர். ஆனால் வினோத் காம்ப்ளிக்கு நெருக்கமான முன்னாள் முதல்தரக் கிரிக்கெட் நடுவர் மார்க்கஸ் கவுட்டோ இன்னொரு முன்னணி ஆங்கில நாளிதழுக்குக் கூறும்போது, “வினோத் காம்ப்ளிக்கு கடுமையான மருத்துவச் சிக்கல்கள் உள்ளன.
ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டு வருகிறார். எனவே மறுவாழ்வு சிகிச்சைக்கு அவர் சென்று பயனில்லை. ஏற்கெனவே மறுவாழ்வு மையங்களுக்கு 14 முறை சென்றுள்ளார். வாஸையில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு நாங்களே அவரை மூன்று முறை கூட்டிச் சென்றிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
1993-ல் இந்திய அணிக்கு அறிமுகமான தருணத்தில் அவர் இங்கிலாந்து, ஜிம்பாப்வேவுக்கு எதிராக அடுத்தடுத்து இரட்டைச் சதம் எடுத்து அப்போது சச்சினை விடவும் பிரபலமான வீரராகத் திகழ்ந்தார். இலங்கையிலும் சதம் கண்டார். 17 டெஸ்ட் போட்டிகளில் 1084 ரன்களை 54.20 என்ற சராசரியுடன் அவர் எடுத்திருந்தார். 104 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2,277 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 4 சதங்களும் ஒருநாள் போட்டிகளில் 2 சதங்களையும் 14 அரைசதங்களையும் எடுத்துள்ளார் காம்ப்ளி.
டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை 1995-லும், ஒருநாள் போட்டி வாழ்க்கை 2000-த்திலும் முடிவுக்கு வந்தது. முதல்தரப்போட்டிகளில் கடைசியாக மும்பை அணியின் கேப்டனாக ரஞ்சி டிராபியில் மகாராஷ்ட்ராவுக்கு எதிராக ஆடினார். முதல் இன்னிங்சில் 68 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸ் 24 ரன்களையும் எடுத்தார் காம்ப்ளி. அதே போல் கடைசி ஒருநாள் லிஸ்ட் ஏ போட்டியிலும் மும்பை கேப்டனாகவே ஆடிய காம்ப்ளி வெற்றியுடன் தன் முதல் தர கிரிக்கெட்டையும் முடித்தார்.