தேனி: எருமேலியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தங்கள் உடலில் பல வர்ண பொடிகளைப் பூசி, கிரீடம் அணிந்து பேட்டைத்துள்ளல் வழிபாட்டில் ஆடிப்பாடி வருகின்றனர். இதனால் இத்தலம் இசை முழக்கங்களாலும், சரணகோஷங்களாலும் களைகட்டி வருகிறது.
சபரிமலைக்குச் செல்லும் வழியில் கோட்டயம் மாவட்டத்தில் எருமேலி அமைந்துள்ளது. இங்குள்ள மணிமாலா ஆற்றின் கரையில் வேட்டைக் கோலத்தினாலான ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. அழுதா நதியில் நீராடி கல் எடுத்துச் சென்று கல்லிடும் குன்றில் அந்த கற்களை வீசுவது, பம்பையில் நீராடி சந்நிதானம்செல்வது போன்ற வழிபாடுகளைப் போன்று இங்கு நடைபெறும் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும் மிகவும் பிரசித்தி பெற்றது.
புலிப்பால் சேகரிக்கச் சென்ற போது எருமை வடிவில் வந்த மஹிஷி எனும் அரக்கியை ஐயப்பன் கொன்றதால் இத்தலம் இப்பெயரில் அழைக்கப்படுகிறது. இதனை நினைவு கூறும்வகையில் இங்குள்ள சாஸ்தாகோயிலில் பேட்டை துள்ளல் எனும் வழிபாடு ஆர்ப்பரிப்புடன் நடைபெறுவது வழக்கம். தற்போது மண்டல கால பூஜைக்காக வரும் பக்தர்கள் பலரும் இங்கு பேட்டை துள்ளல் வழிபாட்டில் பங்கேற்று வருகின்றனர்.
இதற்காக தங்கள் உடலில் பல வர்ண பொடிகளைப் பூசி, கிரீடங்களை அணிந்து கொள்கின்றனர். பின்பு அரக்கியை அழிக்க உதவிய கத்தி, ஈட்டி மற்றும் கதாயுத உருவங்களை ஏந்தியபடி தந்நிலை மறந்து ஆடிப்பாடி மகிழ்ந்து வருகின்றனர். சபரிமலைக்கு முதல்முதலாக வரும் கன்னிசாமிகளும் இதில் அதிகளவில் பங்கேற்று வருகின்றனர். இதனால் எருமேலிபகுதி சரணகோஷம், இசை முழக்கம் மற்றும் ஆனந்த நடனத்தினாலும் களைகட்டி வருகிறது.