புதுடெல்லி: மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது, பாஜக எம்.பி. சமிக் பட்டாச்சார்யா பேசினார். அப்போது அவர், “மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை கம்பெனிகள் வேறு இடங்களுக்கு மாற்றப் பட்டுள்ளன” என்பது உட்பட 2 கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு கம்பெனிகள் விவகாரத்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் மல்கோத்ரா பதில் அளிக்கையில், “கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மேற்கு வங்கத்தில் இருந்து 2,200-க் கும் மேற்பட்ட கம்பெனிகள் இடம் மாறியுள்ளன. அந்த கம்பெனிகள் தங்கள் தலைமை அலுவலகங்களை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்றுள்ளன. அவற்றில் 39 கம்பெனிகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டவை. செலவு குறைப்பு, நிர்வாக வசதி போன்ற பல்வேறு காரணங்களுக்காக அந்த கம்பெனிகள் மேற்கு வங்கத்தில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
முன்னதாக, பாஜக எம்.பி. சமிக் பட்டாச்சார்யாவின் கேள்விக்கு மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாகெட் கோகலே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.