மும்பை: போதைப் பொருள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி (வயது 52) மும்பைக்கு திரும்பியுள்ளார்.
கரண் அர்ஜுன் உட்பட ஏராளமான இந்தி படங்களில் நடித்திருப்பவர் நடிகை மம்தா குல்கர்னி. இவர் முதன்முதலில் தமிழ் படத்தில்தான் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட்டுக்குச் சென்றார். தமிழில் 1991-ம் ஆண்டு வெளிவந்த நண்பர்கள் என்ற படத்தில்தான் இவர் அறிமுகமானார். இந்தப் படத்தை நடிகர் விஜய் தயாரிக்க, அவரது தாய் ஷோபா சந்திரசேகர் இயக்கியிருந்தார்.
இந்தி திரையுலகுக்குச் சென்ற பின்னர் ஏராளமான படங்களில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை கைவிட்டுவிட்டார். கடந்த 1999-ல் இவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் இவர் மீது ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் வழக்கு தொடரப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் ரூ.2,000 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மம்தா குல்கர்னியின் பெயரும் சேர்க்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து அவர், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால், அண்மையில் மம்தா குல்கர்னி மீதான வழக்கை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து மம்தா குல்கர்னி 25 ஆண்டுகள் கழித்து மும்பை திரும்பியுள்ளார்.
மும்பை திரும்பியது குறித்து நடிகை மம்தா குல்கர்னி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: 25 ஆண்டுகளுக்கு பிறகு நான் பிறந்து வளர்ந்த மண், வீட்டில் நிற்கிறேன். மும்பை மாநகரம் அதிக அளவில் மாறிவிட்டது. சொந்த ஊருக்கு வந்திருப்பதாக உணர்கிறேன். எனது உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீர் வழிகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
சோலாப்பூரிலுள்ள பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனமான அவான் லைப்சயின்ஸஸ் நிறுவனத்தில் அந்த போதைப்பொருள் சிக்கியது. இதில் மம்தா குல்கர்னி பெயரும், அவரது நண்பரான விக்கி கோஸ்வாமியின் பெயரும் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.