திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத் தின் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற பஞ்சமி தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்ம குளத்தில் புனித நீராடினர்.
புகழ்பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின் கார்த்திகை பிரம்மோற்சவ விழா, கடந்த நவம்பர் மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் தாயார் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் அனைத்தும் வெகு சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, போக்குவரத்து வசதி, அன்னதானம், தரிசன வசதிகளை தேவஸ்தானம் சிறப்பாக செய்திருந்தது. வாகன சேவை களில் வெளி மாநில நடன கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.
மேலும் பூங்காவில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்பட கண்காட்சி, மலர் கண்காட்சிகளும் கண்கவர் வண்ணத்தில் இருந்ததாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். நவம்பர் 28-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 9 நாட்களாக நடந்து வந்த பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளான நேற்று பிற்பகல் கோயில் அருகே உள்ள தாமரை குளத்தில் பத்மாவதி தாயார் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் பிறகு சக்கரத்தாழ்வாரின் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது இதற்காக காத்திருந்த பக்தர்களும் குளத்தில் மூழ்கி புனித நீராடினர். புனித நீராடுவதற்காக ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் திருச்சானூருக்கு வந்திருந்தனர்.
நேற்று மாலை பிரம்மோற்சவ கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஜீயர்கள், அறங்காவலர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி சியாமள ராவ், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய சவுத்ரி, இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம் மற்றும் அர்ச்சகர்கள், உயர் தேவஸ்தான அதிகாரிகள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.