சென்னை: சென்னையில், ரஷ்ய நாட்டின் மாநில பல்கலைக்கழகம் சார்பில் நவீன ரோபோக்களை எப்படி உருவாக்குவது? தொடர்பான ‘ரோபோடிக்ஸ்’ நிகழ்ச்சி வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது.
ரஷ்யாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு புகழ்பெற்ற முன்னணி கல்வி நிறுவனமான சவுத்வெஸ்ட் மாநில பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்துடன் இணைந்து ‘ரோபோடிக்ஸ் மற்றும் புதுமையான கல்வி தொழில்நுட்பங்களுக்கான நாட்கள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 9-ம் தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. அனுமதி இலவசம்.
இந்நிகழ்வில் ரஷ்யாவின் சவுத்வெஸ்ட் மாநில பல்கலைக்கழகம், பெல்கோரோட் மாநில பல்கலைக்கழகம், அணு இயற்பியல் தொடர்பான ஸ்கோபெல்ட்சின் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்று, நவீன ரோபோக்களை எப்படி உருவாக்குவது, ரஷ்யாவில் ரோபோடிக்ஸ் கல்வியை தொடர ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கவுள்ளனர்.
மேலும் ரஷ்யாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த விளக்கக்காட்சிகள், ரோபோடிக்ஸ் தொடர்பான விரிவுரைகள், பயிலரங்கங்கள், ரோபோக்களின் நேரடி செய்முறை விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன. இத்துடன் மாணவர்களை ஊக்கப்படுத்த கல்வி தொடர்பாக, ரோபோக்கள் உடனான விளையாட்டு போட்டிகளும், புதுமையான ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்கள், ரஷ்யாவின் கல்வி மற்றும் கலாச்சாரம் குறித்த வி.ஆர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) கண்காட்சியும் நடத்தப்படவுள்ளன.
ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூடுதல் திறன்களை கற்றுக்கொள்ள விரும்புவர்கள், ரஷ்யாவின் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தில் உள்ள சமீபத்திய கண்டுபிடிப்புகளை தெரிந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://www.swsu-online.ru/roboticsindia/en என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கலந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சி 10-ம் தேதி ஆவடியில் உள்ள வேல் டெக் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நடைபெறும்.