புதுடெல்லி: ராகுல் காந்தி நாட்டிற்கு ஆபத்தானவர்; துரோகி என பாஜக எம்பிக்கள் லக்ஷமண் மற்றும் சம்பித் பத்ரா குற்றம் சாட்டிய நிலையில், தனது சகோதரரை நினைத்து பெருமைப்படுவதாகவும், நாட்டைவிட அவருக்கு மேலானது எதுவுமில்லை என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பாஜகவுக்கு தைரியம் இல்லை. விவாதம் நடத்துவதில் என்ன பிரச்சினை இருக்கிறது? ஜனநாயகத்தில்தான் விவாதம் நடத்த முடியும். ஆனால், அதற்கும் பயப்படுகிறார்கள்.” என விமர்சித்தார்.
ராகுல் காந்தியை பாஜக எம்பிக்கள் துரோகி என விமர்சித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி, “சுதந்திரப் போராட்டத்தில் 13 ஆண்டுகள் சிறையில் இருந்த ஜவஹர்லால் நேருவை துரோகி என்றார்கள். பாகிஸ்தானை இரண்டாக உடைத்த இந்திரா காந்தியை துரோகி என்றார்கள். நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த ராஜீவ் காந்தியைக்கூட அவர்கள் துரோகி என்று சொல்லலாம். தற்போது அவர்கள் ராகுல் காந்தி விஷயத்திலும் அதையே செய்கிறார்கள். இதில் புதிதாக எதுவும் இல்லை. அவர்கள் அவ்வாறு சொல்வதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.
எனது சகோதரனைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். அவருக்கு நாட்டைவிட மேலானது எதுவும் இல்லை. நாட்டின் ஒற்றுமைக்காக இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4,000 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டவர் எனது சகோதரர்” என தெரிவித்தார்.