சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி – ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதுகின்றன. ஈஸ்ட் பெங்கால் எஃப்சி 8 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 6 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வெற்றி பெறாத நிலையில் கடைசியாக விளையாடிய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது.
அதேவேளையில் சென்னையின் எஃப்சி 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 டிரா, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ள சென்னையின் எஃப்சி அணி, சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பாதைக்கு திரும்புவதில் முனைப்பு காட்டக்கூடும்.