புதுடெல்லி: அசாம் மாநிலத்தைப் போல், பொது விழாக்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க ஒடிசா அரசும் முடிவு செய்துள்ளது. அசாமின் புதிய விதிகளின்படி உணவு விடுதிகள், ஆன்மிகம், திருமணங்கள் உள்ளிட்ட பொது விழாக்களில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அம்மாநில பாஜக தலைவரும், முதல்வருமான ஹிமாந்தா பிஸ்வாஸ் புதன்கிழமை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ‘இன்று முதல் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள், பண்டிகை மற்றும் மக்கள் கூடும் பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி உண்ண தடை விதிக்கப்படுகிறது. இனி சமூக, ஆன்மிகம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மாட்டிறைச்சி விநியோகிக்கவும் தடை விதிக்கப்படுகிறது.’ எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த புதிய விதிகள், அசாம் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021-ல் சேர்க்கப்பட உள்ளன. இதேபோல், பாஜக ஆளும் ஒடிசா மாநில அரசும் மாட்டிறைச்சிக்கு அங்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. ஒடிசா முதல்வரான மோகன் சரண் மாஜி, தம் மாநிலத்திலும் பசுவதை தடை சட்டத்தை மேலும் வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். பசு மாடுகள் கடத்தலை தடை செய்யும் வகையிலான தீவிர சட்டங்களை சட்டப்பேரவையில் அமலாக்க உள்ளார்.
இது குறித்து ஒடிசாவின் சட்டத்துறை அமைச்சரான பிரித்திவிராஜ் ஹரிச்சந்தன் கூறும்போது, ‘இப்பிரச்சனையில் நம் அரசு பல்வேறு சட்டத் திருத்தங்களை அமலாக்க உள்ளது. இது தொடர்பான சட்டங்களை உருவாக்கும் பணி தொடர்கிறது.’ எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஒடிசாவின் எதிர்கட்சிகள் மாட்டிறைச்சி மீதான தடைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ-வான பிரமிளா மல்லீக் மற்றும் காங்கிரஸின் தாரா பிரசாத் பஹினிபதி ஆகியோர் மாட்டிறைச்சி ஏற்றுமதியை முதலில் தடை செய்யும்படி வலியுறுத்தி உள்ளனர்.