மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் நேற்று முன் தினம் அனுக்ஞை பூஜை,வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. மாலையில் தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருவிழாவை முன்னிட்டு முன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
எட்டாம் நாள் விழாவில் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. டிச.13-ம் தேதி காலை முக்கிய விழாவான சிறிய வைரத் தேரோட்டம் நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் பால தீபம் ஏற்றப்பட்டு, மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும்.
தொடர்ந்து, 16 கால்மண்டபம் அருகில் சொக்கப்பனை ஏற்றப்பட்டு, இரவு 8 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. பத்தாம் நாள் இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு மற்றும் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.
ஏற்பாடுகளை அறநிலையத் துறை துணை ஆணையர் சூரிய நாராயணன், கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்யபிரியா தலைமையில் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.