சண்டிகர்: பஞ்சாபில் கடந்த 2007 முதல் 2017 வரை சிரோமணி அகாலி தளம் ஆட்சியில் இருந்தது. அப்போது துணை முதல்வராக இருந்த சுக்பிர் சிங் பாதல் செய்த தவறுகளுக்காக அவருக்கு சீக்கிய மதத்தின் உயர் அமைப்பான அகால் தக்த் தண்டனை வழங்கியது.
இதன்படி அமிர்தசரஸ் பொற்கோயிலில் சுக்பிர் சிங் பாதல் நேற்று முன்தினம் சேவை செய்தார். அப்போது காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். எனினும் அதிர்ஷ்டவசமாக சுக்பிர் பாதல் உயிர் தப்பினார்.
இந்நிலையில் சுக்பிர் பாதல் நேற்று பஞ்சாபின் ரூப் நகர் மாவட்டத்தில் உள்ள தக்த் கேஸ்கர் சாஹிப் குருத்வாராவில் நேற்று கீர்த்தனைகள் கேட்டார். பிறகு சமுதாய சமையல் அறையில் பாத்திரங்களை சுத்தம் செய்தார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் இந்த சேவையில் ஈடுபட்டார்.