சென்னை: தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு வரும் பிப்ரவரி முதல் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
மாநில தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் சார்பில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தொழில்நுட்பத்தேர்வுகள் ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்தப்பட்டு வருகின்றன. இளநிலை, இடைநிலை, முதுநிலை, அதிவேகம் என பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் இத்தேர்வுகளை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் எழுதுகின்றனர். இத்தேர்வுகள் மட்டுமின்றி அரசு கணினி ஆட்டோமேஷன் சான்றிதழ் தேர்வையும் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் நடத்துகிறது.
தொழில்நுட்பத்தேர்வுகளுக்கான பாடத்திட்டம் நீண்ட காலமாக மாற்றப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போதைய வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைக்க தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் முடிவுசெய்து அதற்காக வல்லுநர்கள் அடங்கிய குழுவையும் அமைத்தது. அதைத்தொடர்ந்து, அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான பாடத்திட்டமும், தேர்வுமுறையும் அண்மையில்தான் மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய தேர்வுகளுக்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்தின் இணைதளத்தில் (https://dte.tn.gov.in/revised-gte-syllabus) வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டம் வரும் பிப்ரவரி முதல் அமல்படுத்தப்படும் என தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.